நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரத்தில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் மரங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகி முற்றிலுமாக எரிந்து நாசமானது இதில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி உட்பட 13 பேர் உடல் கருகி உயிர் இழந்தார்கள்.
இந்த சூழ்நிலையில், ஹெலிகாப்டர் எவ்வளவு உயரத்தில் பறந்து வந்த போது விபத்து உண்டானது, ஹெலிகாப்டரில் இருந்து இறங்கு தளத்தை அடைய எவ்வளவு தூரம் இருந்தது, உள்ளிட்ட முக்கிய தகவல் அடங்கிய கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இதற்கிடையே நேற்று காலை இந்திய விமானப்படை தளபதி எ.ஆர் சவுத்ரி ஹெலிகாப்டர் விழுந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், விமானப்படை அதிகாரிகள் ஹெலிகாப்டரில் இருந்து நீக்கிய பாகங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
இதனையடுத்து தமிழக தடயவியல் துறை இயக்குனர் சீனிவாசன் நேரில் வந்து ஆய்வு செய்தார், அவருடன் வந்த குழுவினர் தடயங்களை சேகரித்தனர், இந்த பணியில் விமானப்படை ஊழியர்கள், தடயவியல் நிபுணர்கள், உள்ளிட்ட ராணுவ வீரர்கள் தீயணைப்பு வீரர்கள் காவல்துறையினர் உதவியுடன் தடயங்களை சேகரித்து இருக்கிறார்கள்.
ஒரு சில பாகங்களை வெட்டி எடுக்க எந்திரம் கொண்டு செல்லப்பட்டது, அதோடு ரசாயனங்கள் எடுத்துச் செல்லப்பட்டன, இரவு முழுவதும் அதிக வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகளின் உதவியுடன் கருப்பு பெட்டியை தேடும் பணி நடைபெற்றது, காலையிலும் இந்த பணி தொடர்ந்தது.
இதனையடுத்து காலை 10 மணி அளவில் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது, அதன் பிறகு அதை விமானப்படையினர் எடுத்துச் சென்றார்கள் அதன் பிறகு அந்த கருப்பு பெட்டியை ஆய்வு செய்வதற்காக பெங்களூருவில் இருக்கும் ராணுவம் விமானப்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதிநவீன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி, எந்திர கோளாறு அல்லது கடும் பனிமூட்டம் மோசமான வானிலை காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது தொடர்பாக விசாரணையில் தெரியவரும் இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள், விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் விசாரணை செய்து வருகிறார்கள். முன்னதாக தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.