கங்கையில் மிதந்து வரும் சடலங்கள்! வலை அமைத்த பீகார்!
கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தினம் தினம் புதிய செய்திகள், மனதை பதைபதைக்க வைக்கின்றன.அதே போல் பீகாரின் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள கங்கை நதியில் கடந்த 10 ம் தேதி 71 உடல்கள் மிதந்து வந்ததை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
அதனை தொடர்ந்து அங்கு வந்த அரசு அதிகாரிகள் உடல்களை கைப்பற்றி அடக்கம் செய்தனர்.மேலும் இது உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களாக இருக்கலாம் என்றும் அரசு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இறந்த உடல்கள் 5 முதல் 7 நாட்களாக தண்ணீரில் மிதந்து வந்து இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.மேலும் இது உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து வந்து இருக்கலாம் எனவும் சந்தேகித்து வருகின்றனர்.
அந்த மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவும், எரிவூட்டவும் போதிய பண வசதி இல்லாத காரணத்தினால் கங்கை நதியில் வீசி விட்டு சென்று இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் அதிகாரிகள் மேலும் இந்த சம்பவம் தொடராமல் இருக்க வேண்டி,பீகார் மாநிலத்தில் கங்கை நதியின் குறுக்கே வலைகள் அமைத்து உள்ளனர்.
மேலும் அவ்வாறு வீசப்படும் உடல்களை மீட்டு எடுக்க கங்கை நதியின் பல்வேறு பகுதியில் வலைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.