ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். முதல் படத்திலேயே தேசிய விருதும் வாங்கினார். அதன்பின் ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன் என ரவுண்டு கட்டி அடித்தார். அவரின் இசைக்கு இளைஞர்கள் ரசிகர்களாக மாறினார்கள். அவரின் வெஸ்டர்ன் இசை பலரையும் ஆட்டம் போட வைத்தது.
அப்படியே ஹிந்தி சினிமாவுக்கும் போய் கலக்கினார். ரங்கீலா படத்தில் துவங்கி பல ஹிந்தி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். அப்படியே ஹாலிவுட்டுக்கு போனார். ஹாலிவுட் இயக்குனர் இயக்கிய ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வாங்கினார். பெரும்பாலும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் இவர். நிறைய படங்களில் பாடியும் இருக்கிறார்.

இந்நிலையில்தான் அவரின் ஒரு பாடல் காப்புரிமையில் சிக்கி இருக்கிறது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ரஹ்மான் இசையமைத்த வீரா ராஜ வீரா பாடல் தனது தந்தை இசையமைத்த ‘சிவா ஸ்துதி’ பாடலை காப்பி அடித்து உருவாக்கப்பட்டதாக பாடகர் வாசிஃபுதீன் தாகர் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த பாடலின் உந்துதலால் (inspired) அப்பாடலை உருவாக்கியதாக ரஹ்மான் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் ரஹ்மான் 2 கோடி செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2 கோடியை நீதிமன்ற பதிவாளரிடமும் செலுத்தவும், மனுதாரருக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இதுவரை இளையராஜாதான் தனது பாடல்களை மற்றவர்கள் பயன்படுத்துவதற்காக காப்புரிமை கேட்டு நோட்டீஸ் அனுப்பி வந்தார். இப்போது முதல்முறையாக ஏ.ஆர்.ரஹமான் இந்த பிரச்சனையில் சிக்கியிருக்கிறார்.