கர்நாடகாவில் யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும்? வெளியான கருத்துக் கணிப்பு
கர்நாடகாவில் யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பது குறித்து எடுக்கப்பட்ட தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பின்படி, காங்கிரசுக்கு 115 முதல் 127 இடங்களும், பாஜகவுக்கு 68 முதல் 80 இடங்களும், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு 23 முதல் 35 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக அரசுக்கு எவ்வளவு மதிப்பீடு என்ற கேள்விக்கு, 50.5 விழுக்காட்டினர் மோசம் என்றும், 27.7 விழுக்காட்டினர் நன்று என்றும் கூறியுள்ளது. அதே நேரத்தில், 57.1 விழுக்காட்டினர் பாஜக ஆட்சி மீது அதிருப்தியில் இருப்பதாகவும், மாற்றம் வேண்டும் என்று தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் செயல்பாட்டுக்கான மதிப்பீட்டுக்கு, 46.9 விழுக்காட்டினர் மோசம் என்றும், 26.8 விழுக்காட்டினர் நன்று என்றும் கூறியதாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், பிரதமர் மோடியின் செயல்பாட்டுக்கு 47.4 விழுக்காட்டினர் நன்று என்றும், 33.8 விழுக்காட்டினர் மோசம் என்றும் தெரிவித்துள்ளகா கூறப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில், 29.1 விழுக்காடு வேலைவாய்ப்பின்மையும், 21.5 விழுக்காடு குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்டவையும் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். 30.8 விழுக்காடு லிங்காயத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து, ஹிஜாப் விவகாரம் தேர்தலில் குறிப்பிட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.
யார் அடுத்த முதலமைச்சர் என்ற கேள்விக்கு காங்கிரசின் சித்தராமையாவுக்கு 39.1 விழுக்காட்டினரும், பாஜகவின் பசவராஜ் பொம்மைக்கு 31.1 விழுக்காட்டினரும் தெரிவித்துள்ளனர். குமாரசாமிக்கு 21.4 விழுக்காட்டினரும், காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமாருக்கு 3.2 விழுக்காட்டினரும் தெரிவித்துள்ளனர்.