TVK BJP: தமிழக சட்டமன்ற தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதிமுகவும், திமுகவும் தான். ஆனால் இந்த முறை அதனை மிஞ்சும் அளவிற்கு தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சி உருவாகி அரசியல் அரங்கை ஆட்டம் காண வைத்துள்ளது. இதனால் இம்முறை நான்கு முனை போட்டி நிலவும் என்று கணிக்கப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகை திராவிட கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பெருகும் ஆதரவு அதிமுக, திமுக, பாஜக போன்ற கட்சிகளுக்கு அதன் வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதிலும் முக்கியமாக விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறி கடுமையாக விமர்சித்து வருவதால் இது பாஜகவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தம்மை கொள்கை எதிரி என்று கூறினாலும் பரவாயில்லை என விஜய்யை கூட்டணியில் சேர்க்க பாஜக முயற்சித்தது. ஆனாலும் பாஜக உடன் கூட்டணி சேர முடியாது என்பதால் விஜய் உறுதியாக இருந்து வருகிறார். இவ்வாறு தவெகவை கூட்டணியில் சேர்க்க முடியாமல் தவிக்கும் பாஜக, அவர்களின் பி டீம் மூலம் விஜய்யை கூட்டணியில் சேர்க்க திட்டம் தீட்டியுள்ளது. அதன் ஒரு பகுதியாக முதலில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், அடுத்ததாக ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோரும் தவெக உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இவர்கள் மூவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், மத்திய அமைச்சர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியும் வருகின்றனர். இந்த சுழலில், இவர்கள் அனைவரும் தவெகவில் இணைவது ஒட்டு மொத்த பாஜகவையும் கட்சியில் இணைப்பதற்கு சமம் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து இவர்கள் மூலம் மெல்ல மெல்ல விஜய்யையும் பாஜக கூட்டணிக்குள் கொண்டு வருவது தான் மத்திய அமைச்சர்களின் திட்டம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.