மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் குடும்பத்திற்கு குழந்தையை கடத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டல் கடிதம் வந்த நிலையில் மிரட்டல் கடிதம் விடுத்த பள்ளித் தாளாளரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் வீட்டின் அருகே மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலைக்கு காரணமானவர்கள் யார் என்று இன்று வரை விசாரணை நடத்தி வரும் போலீஸார் இதுவரை 22 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
இதையடுத்து அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் இறந்த ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மனைவி பொற்கொடி அவர்களுக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த பதவியை பொற்கொடி அவர்கள் ஏற்க மறுத்ததால் அவருக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி சதீஷ் என்பவரின் பெயரில் ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கழந்தையை கடத்தி கொலை செய்து விடுவேன் என்றும் குடும்பத்தையும் கொலை செய்து விடுவேன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து பொற்கொடி அவர்கள் காவல் துறைக்கு தெரிவிக்க ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மனைவி பொற்கொடி மற்றும் அவருடைய குழந்தை இருக்கும் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் காவலுக்கு போடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மிரட்டல் கடிதம் விடுத்தவர் பள்ளித் தாளாளர் அருண்ராஜ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து இவர் தற்பொழுது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளித் தாளாளர் அருண்ராஜ் அவர்கள் ஏற்கனவே கடலூர் முதன்மை கல்வி அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அருண்ராஜ் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இவருடைய வழக்கில் முக்கிய சாட்சியாக டிரைவர் சதீஷ் சேர்க்கப்பட்டதை அடுத்து டிரைவர் சதீஷை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பள்ளித் தாளாளர் அருண்ராஜ் அவர்கள் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பினார்.
இது குறித்த விசாரணை நடந்து வந்த நிலையில் மிரட்டல் கடிதம் விடுத்த தாளாளர் அருண்ராஜ் அவர்களை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளனர்.