தங்கத்தின் மீது வாங்கும் கடன் அதிகம்! வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி!
நமது பாரம்பரியத்தில் தங்கம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. திருமண சடங்குகள் என எல்லா முக்கியமான நல்ல விஷயம் ஆகட்டும் அல்லது அமங்கல விஷயம் ஆகட்டும் நாம் தங்கம் இல்லாமல் விழாக்களை நடத்துவது இல்லை. திருமணம், காதுகுத்து, முதற்கொண்டு பெண் பெரியவளாகும் விஷயம் வரை எல்லா இடங்களிலுமே நாம் தங்கம் முக்கியமான ஒன்றாக பயன்படுத்தி வருகிறோம். ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் காலம் தொட்டு, முதல் முதலிலேயே மனித வரலாற்றில் பணம் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே, பல நகரங்களில் தங்கம் ஒரு மதிப்பு மிகுந்த உலோகமாக கருதப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டுகள் சில நாடுகளில் செல்லும் சில நாடுகளில் செல்லாது. ஆனால் தங்கம் அப்படி அல்ல. எல்லா நாட்டிலும் அதற்கு ஒரே மதிப்புதான். முக்கியமாக தென்னிந்தியாவில் தங்க மோகம் மிக அதிகம். செல்வ செழிப்பின் காரணமாக இந்தியா ஒரு மாபெரும் சந்தையாக இருப்பதாகவும், உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. நம் நாட்டின் கலாச்சாரத்தில் சேமிப்புகளை பாதுகாக்கவும், செல்வ செழிப்பு, மற்றும் அந்தஸ்தின் சின்னமாகவும் திகழ்கிறது.
தங்கத்தை எளிதில் வெளியே எடுத்துச் செல்ல முடிவதாலும் அது பாதுகாப்பான முதலீடாக கருதுவதாலும், கிராமப்புற மக்களிடம் தங்கம் வாங்கும் மோகம் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு சிறு நகரங்களிலும் பல நகைக் கடைகள் இருப்பதை காணமுடிகிறது. சிறு மற்றும் குறு நிறுவனங்கள் அதிகம் உள்ள நகை வியாபாரத் துறையில், சமீப காலங்களில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும் இறங்கியுள்ளன. உலகில் உள்ள மொத்த தங்கத்தில் 11 சதவிகிதம் இந்திய குடும்பங்களின் வசம் மட்டுமே உள்ளது.
அது அமெரிக்க அரசு, உலக வங்கி, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகியவற்றின் மொத்த தங்க இருப்பை விட அதிகம் என்றும் கூறியுள்ளது. இந்தியாவின் மொத்த விற்பனையில் தென்னிந்தியாவின் பங்கு மட்டும் 60 சதவிகிதம் என்றும் தங்கம் மற்றும் நகை உற்பத்தியாளர்கள் அமைப்பு கூறியுள்ளது. தற்போது கொரோனா தொடரின் காரணமாக பலரும் மிகவும் நலிந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
கொரோனா தாக்கத்தால், அன்றாட செலவுகளுக்கும், மருத்துவ சிகிச்சைக்காகவும் தங்களிடம் இருக்கும் நகைகளை அடமானம் வைக்கவோ அல்லது விற்கும் நிலைக்கோ தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா இந்தியாவில் மிகக் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி அதன் காரணமாக மக்கள், வேறு வழியின்றி தன்னிடம் உள்ள தங்கங்களை நாளுக்கு நாள் விற்று வருகின்றனர். தற்போது மூன்றாவது அலைக்கு அரசு தயாராகி வந்தாலும், கொரோனா பேரிடரால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதித்த நிலையிலேயே உள்ளது.
அரசு வழங்கும் ரேஷன் பொருட்கள் மக்களின் தேவையை நிறைவேற்றக் கூடிய அளவில் இல்லை. இதன் காரணமாக குடும்ப செலவுக்கே சிரமப்பட வேண்டிய நிலைதான் பெரும்பாலான குடும்பங்களில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக தங்க நகை கடன், வாகன கடன், வீட்டுக் கடன், தனிநபர் கடன் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் இந்திய ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
மேலும் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெறுவது, வங்கி முதலீட்டு பத்திரங்களை அடமானமாக வைத்து கடன் பெறுவது போன்றவையும், அதிகரித்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. அதிலும் முதலீட்டு பத்திரங்கள் மூலமாக ரூபாய் 65891 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி பட்டியலிட்டு கூறுகிறது.