ADMK DMK: டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து தஞ்சைக்கு விரைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் அளித்தார். அங்குள்ள நிலைமையைப் பற்றி அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்து, தஞ்சையில் உள்ள திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்கனவே சேர்க்கப்பட்ட மூட்டைகள் குடோன்களுக்கு எடுத்துச் செல்லப்படாததால் புதிய கொள்முதல் நடைபெறாமல் தாமதமாகி வருகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டப்பேரவையில் நான் இதை எடுத்துக் கூறியபோது, உணவுத்துறை அமைச்சர் தவறான தகவல் அளித்து, ஒரு நாளுக்கு 2,000 மூட்டைகள் எடை போடப்படுகின்றன என்றார். ஆனால் நிஜத்தில் அது வெறும் 800–900 மூட்டைகள் மட்டுமே, என கூறினார். மேலும், தான் போட்ட நகையை அடமானம் வைத்து நெற்பயிர் விளைவித்த பெண் விவசாயி ஒருவர், 20 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாமல் மழையில் நனைந்து முளைத்துப் போனதைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறினார்.
அது என்னை கலங்க செய்தது, என உருக்கமாக குறிப்பிட்டார். மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசிக்கு அனுமதி வழங்கியதை கூட திமுக அமைச்சர் அறியாமல் தவறான தகவல் தெரிவித்ததாகவும், இது விவசாயிகளுக்கு எதிரான செயலாகும் என்றும் பழனிசாமி குற்றஞ்சாட்டினார். அதிமுக ஆட்சியில் 4.5% இருந்த விவசாய வளர்ச்சி, திமுக ஆட்சியில் 0.09% ஆக சரிந்துள்ளது. விவசாயிகளை புறக்கணிக்கும் திமுக அரசுக்கு பதிலாக, அதிமுக எப்போதும் விவசாயிகளின் பக்கம் நிற்கும், என அவர் வலியுறுத்தினார்.

