பாஜகவினரை கன்னத்தில் அறைந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி
பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதே போல தாங்கள் கொண்டு வந்த இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க-வினர் மற்றும் அதன் துணை அமைப்புகள் நாடு முழுவதும் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ராஜ்கர் மாவட்டத்தில் பாஜகவினரும் அதன் துணை அமைப்பை சேர்ந்தவர்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பேரணி ஒன்றை நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் அம்மாவட்டத்தின் துணை ஆட்சியரான பிரியா வர்மா பாஜக தொண்டர் ஒருவரின் கன்னத்தில் அறைந்தார். இதைப் பார்த்த மற்ற தொண்டர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.
இந்நிலையில் துணை ஆட்சியரான பிரியா வர்மா பாஜக தொண்டரை அறைந்த இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் #PriyaVerma என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டானது. துணை ஆட்சியர் பிரியா வர்மா மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூர் மாவட்டத்திலுள்ள மங்காலியா கிராமத்தைச் சேர்ந்தவர்.
சம்பவம் நடந்த பகுதியான ராஜ்கரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த தடை உத்தரவையும் மீறி பாஜகவினர் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக ராஜ்கரில் பேரணி ஒன்றை நடத்தினர். தடையை மீறி நடத்தப்பட்ட இந்த பேரணியை கலைக்க சென்ற காவல் துறையினருக்கும் பாஜகவினருக்கும் ஏற்பட்ட மோதலில் நிலைமையை சமாளிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் துணை ஆட்சியரான பிரியா வர்மா பாஜக தொண்டர் ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதைக்கண்டு கோபமடைந்த கூட்டத்தில் இருந்த பாஜக தொண்டர் ஒருவர் பெண் என்றோ,அரசு அதிகாரி என்றோ பார்க்காமல் பிரியா வர்மாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்க முயற்சித்துள்ளார். ஆனால் அருகிலிருந்த மற்ற காவலர்கள் அவர் பாதுகாப்பாக மீட்டனர். காவல் துறையினருக்கும் பாஜகவினருக்கும் ஏற்பட்ட இந்த மோதலால் சம்பவ இடமானது மேலும் பதற்றமானது. இதனையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பாஜகவிற்கு ஆதரவாக போரடிய 150 பேர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜக தொண்டரை தாக்கிய துணை ஆட்சியர் பிரியா வர்மாவின் இந்த செயலுக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துக்கள் எழுந்த வண்ணமாக உள்ளது. குறிப்பாக மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சிவராஜ் சிங் சௌஹான் இந்த நிகழ்வை கண்டித்துள்ளார்.
இவருடைய செயலை கண்டிக்கும் விதமாக சிவராஜ் சிங் சௌஹான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,”கலெக்டர் மேடம், நீங்கள் எந்த சட்டப்புத்தகத்தைப் படித்தீர்கள் என்று என்னிடம் சொல்லுங்கள். அமைதியான நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களை அடிக்க யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது என்றும், மேலும் இது மாதிரியான ஹிட்லர் நடவடிக்கைகளை ஒரு போதும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்” என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் இதற்கு காரணமான ஆளும் கட்சியையும் அவர் விமர்சித்துள்ளார்.