D.M.D.K:தேமுதிக தலைவராக விஜயகாந்த் இருந்த போது அக்கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு, தேர்தல் பிரச்சாரத்திற்கும் பெருமளவு தொண்டர்களும், ஆதரவாளர்களும் குவிந்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாறி தேமுதிக கட்சி பின்தள்ளப்பட்டதோடு மட்டுமல்லாமல், கட்சிக்கான மக்களின் ஆதரவும் குறைந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் தேமுதிக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆனால், அந்த கூட்டத்தில் எதிர்பார்த்த அளவில் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்கவில்லை. இதனால் கோபமடைந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது அதிருப்தியை வெளிப்படையாக காட்டியிருந்தார். “கூட்டம் இல்லாத ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதலும், கடைசியும் ஆகும்” என்று கூறினார்.
இவ்வாறான குறைந்த பங்கேற்பு, தேமுதிக தலைமைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, பொதுச்செயலாளர் பதவியை பிரேமலதா விஜயகாந்த் ஏற்ற பிறகு, கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதற்காக கூட்டணி அமைப்பதும், பிரச்சாரம் செய்வதும் என பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால் அந்த முயற்சிகள் எதுவும் கைக்கொடுப்பதாக தெரியவில்லை. தலைமை மாற்றத்திற்கு பிறகு தேமுதிக பல இடங்களில் பலவீனமடைந்துள்ளதை இந்த சம்பவம் காட்டுகிறது. இது, தேமுதிக-வின் எதிர்கால வளர்ச்சிக்கு சவாலாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. அதேசமயம், அடுத்தடுத்த தேர்தல்களை முன்னிட்டு பிரேமலதா, நிர்வாகிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகள் எடுப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.