திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பக்தர்கள் வந்து செல்ல அனுமதி! ஆனால் இதற்கு கிடையாது! – தமிழக அரசு!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 10 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தற்போது கொரோனா நோய் தொற்றின் காரணமாக அனைத்து கோவில்களிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டி, தமிழக அறிவிப்புகள் மற்றும் வழிமுறைகளுடன் அனைத்து பூஜை வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுவதால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
எனவே கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெறும்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டிருந்தது. இதேபோல நேற்று மதியம் ஒரு மணியில் இருந்து வருகிற 26-ஆம் தேதி வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும், தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் திருவண்ணாமலையில் இன்றும், நாளையும் கிரிவலம் செல்வதற்கு 20 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு திடீர் அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளது. திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு இந்த பதிலை தற்போது தெரிவித்துள்ளது.
மேலும் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்க வாய்ப்பே இல்லை என்றும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயர மலை உச்சியில், மகாதீபம் ஏற்றப்படும். எனவே இதையொட்டி நாளை அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு அதிகாலை 4 மணி அளவில் சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில், பரணி தீபம் ஏற்றப்படும்.