ADMK AMMK BJP: 2026 யில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. ஆளுங்கட்சியாக உள்ள திமுக இந்த முறையும் வெற்றி பெற வேண்டுமென பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மேலும் தொடர் தோல்விகளை தழுவி வரும் அதிமுகவுக்கு இந்த தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம் என்பதால் பாஜக உடன் கூட்டணி அமைத்து வெற்றி கணக்குகளை வகுத்து வருகிறது. அதிமுகவை விட பாஜக தமிழக தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றே சொல்லலாம்.
வெற்றி வாய்ப்பை தட்டி பறிக்க வேண்டும் என நினைக்கும் பாஜகவிற்கு அதிமுகவின் பிரிவினைகளும், எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை வெறியும் அதனை அடியோடு நசுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதிமுகவின் வருகையால் பாஜக கூட்டணியிலிருந்த ஓபிஎஸ், தினகரன் விலகியது பாஜகவிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரிக்க முதன்மை காரணமாக இருந்த அண்ணாமலையின் பதவியும் பறிக்கப்பட்டது.
மேலும் செங்கோட்டையனும் தவெகவில் இணைந்து விட்டார். இவ்வாறு அதிமுகவில் பிரிவினைகள் தொடருவது, பாஜகவிற்கு பயத்தை ஏற்படுத்தியது. இதனால் இபிஎஸ்க்கு எதிராக ஒரு அணியை உருவாக்கி அவரை வீழ்த்தலாம் என திட்டம் தீட்டி இருக்கிறது. இதற்காக முதலில் இபிஎஸ்க்கு எதிராக உள்ள அண்ணாமலையும், ஓபிஎஸ்யும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினர். இதன் பின்னர் தினகரனும் டெல்லி செல்வார் என்று நினைத்த சமயத்தில், அமித்ஷாவே என்னை அழைத்தாலும் நான் அங்கு செல்ல மாட்டேன் என்று அவர் கூறியது, பாஜக மேலிருந்த கோபத்தை வெளிப்படுத்தியது.
இதனால் அமித்ஷா சார்பாக அண்ணாமலை தினகரனை சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சு வார்த்தையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கபட்டதாக கூறப்படுகிறது. மேலும் டெல்லி சென்ற அண்ணாமலையிடம் அமித்ஷா, தனிக்கட்சி தொடங்குங்க இல்லன்னா தினகரன் கூட கூட்டணி வைங்க என்று சொன்னதாக தகவல் பரவியுள்ளது. இதனை பற்றி பேச தான் அண்ணாமலையும், தினகரனும் சந்தித்திருப்பார்கள் என்ற கருத்தும் வலுப்பெறுகிறது.

