TVK BJP: சில மாதங்களுக்கு முன்பு பீகாரில் நடந்த தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றது. அண்டை மாநிலங்களில் பாஜக வலுவாக இருந்தாலும், தமிழகத்தில் அதன் செல்வாக்கு வலுபெறவில்லை. இதற்காக பாஜக பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுக உடன் கூட்டணி அமைத்து விட்டது. இரு கட்சிகளுக்கும் இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் மிக தீவிரமாக உள்ளது. இதற்காக அதிமுக சார்பில் பாதியளவு தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், மீதமிருக்கும் தொகுதிகளுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
பாஜக தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென்றால், அதற்கு அதிமுகவின் கூட்டணி மட்டுமல்லாது, மற்றொரு முக்கிய கட்சியின் கூட்டணியும் தேவை. அதற்காக விஜய் தலைமையிலான தவெகவை சேர்க்க நினைத்தது. ஆனால் விஜய் கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லை என்பதில் தெளிவாக இருந்தார். மேலும் அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து இருந்ததை ஒன்றிணைக்க நினைத்த பாஜகவிற்கு அது தோல்வியிலேயே முடிந்தது. இதுவும் பாஜக தமிழகத்தில் நுழைய முடியாததற்கு தடையாக இருந்தது. இவை இரண்டும் பாஜகவிற்கு பாதகமாக அமைந்த நிலையில், இதனை சாதகமாக மாற்ற பாஜக முயற்சித்தது. அதன் ஒரு பகுதி தான் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது.
இவர் தவெக இணைந்த பின்னர் தவெகவையும் மெல்ல மெல்ல பாஜக கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியை மேற்கொள்வார் என்று கூறப்பட்டது. அதனால் இது முழுக்க முழுக்க பாஜகவின் சதி திட்டம் என்றே பார்க்கப்பட்டது. இந்நிலையில் இதனை உறுதிபடுத்தும் விதமாக, நடிகர் எஸ்.வி சேகர் ஒரு கருத்தை கூறியுள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து ஒரு வீடியோ வெளியிட்ட அவர், செங்கோட்டையன் இந்த தவறை செய்ததிற்கு பாஜகவின் அழுத்தமே காரணம் என்று பாஜகவிற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். இவ்வாறு இது குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இவரின் இந்த கூற்று செங்கோட்டையன் பாஜக, சொல்லி தான் தவெகவில் சேர்ந்தார் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

