சீனாவுடன் போரிட்ட இந்தோ-திபெத் போலீசாருக்கு அறிவிக்கப்பட்டது குறித்து உங்களுக்கு தெரியுமா? இதுதான் வீர பதக்கங்களாம்!
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன படையினர் இடையே கடந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் பயங்கர மோதல் ஏற்பட்டது. சீனா நடத்திய காட்டுமிராண்டி தனமான தாக்குதலில் நமது படை வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். சீனா தரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த மோதலின் போது சீன படையினரை எதிர்த்து இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையினர் மிகவும் வீரத்துடன் செயல்பட்டு சீனாவை எதிர்த்து சண்டை போட்டனர்.
அவர்களின் வீரத்தை போற்றும் வகையில் சுதந்திர தினத்தின்போது வழங்கப்படுகின்ற பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மிக வீரத்துடன் செயல்பட்டதற்காக இருபத்தி மூன்று பதக்கங்களில் 20 பதக்கங்கள், கடந்த வருடம் மே, ஜூன் மாதங்களில் சீன படையினருடன் லடாக்கில் நடந்த மோதலில் சண்டையிட்ட, இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையினருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
20 பேரில் 8 பேருக்கு அவர்களின் துணிச்சலான செயல் மற்றும் துல்லியமான திட்டமிடல் தந்திரோபாய நுண்ணறிவும் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி தாய் நாட்டை பாதுகாப்பதற்காகவும், ஜனாதிபதி காவல் பதக்கம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 6 பேருக்கு மே 18ஆம் தேதி பிங்கர் 4 என்ற பகுதியில் தீரமுடன் செயல்பட்டதற்காகவும், எஞ்சிய 6 பேருக்கு அதே நாளில் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் துணிச்சலுடன் செயல்பட்டதற்காகவும், ஜனாதிபதி காவல் பதக்கம் அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைப் போர், மோதல் மற்றும் எல்லைப் பாதுகாப்பு பணியின் போது இந்தோ- திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் துணிச்சலுக்காக வழங்கப்படுகிற மிக அதிக எண்ணிக்கையிலான வீர பதக்கங்கள் இவைதான் என்றும், இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையின் செய்தி தொடர்பாளர் விவேக் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் பெருமிதத்துடன் கூறுகையில், தொழில்முறை திறன்களின் மிக உயர்ந்த ஒழுங்கில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையினர் தோளோடு தோள் நின்று சண்டை இட்டனர். காயமடைந்த இந்திய படை வீரர்களை பத்திரமாக கொண்டு வந்தனர். இரவு முழுவதும் சண்டையிட்ட போதிலும் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டன எனவும் குறிப்பிட்டார்.