உதவித்தொகையை உயர்த்துக! மாற்றுத்திறனாளிகள் மாநிலம் முழுவதும் போராட்டம்!

Photo of author

By Sakthi

40 சதவீதம் ஊனமுற்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 1500 ரூபாய் உதவித்தொகை தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. இந்த உதவித்தொகையை 3000 ரூபாய் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் என்று உயர்த்தி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக நேற்று போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் சாலை மறியல் உடன் கூடிய போராட்டத்தை இவர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். சென்னையை பொருத்தவரையில் கொளத்தூர், திருவொற்றியூர், எழும்பூர், தாம்பரம், கிண்டி, உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்சிராணி தலைமையிலும், எழும்பூர் தாலுக்கா அலுவலகம் அருகில் மாநிலச் செயலாளர் வில்சன் தலைமையிலும், என்று ஒவ்வொரு பகுதிகளிலும் நிர்வாகிகள் தலைமையில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் இதில் பங்கேற்றதாக தெரிகிறது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தார்கள். ஒரு சில பகுதிகளில் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றார்கள். இதுதொடர்பாக மாற்றுத்திறனாளிகளின் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வில்சன் தெரிவித்ததாவது,

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தக் கோரி பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றோம். கடந்த பட்ஜெட் அறிவிப்பின் போது உயர்த்துவார்கள் என்று எதிர்பார்த்தோம், அதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று நினைத்து இருந்தோம். ஆனால் ஏமாற்றம்தான் கிடைத்தது. தற்போது வரக்கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆவது உதவித்தொகையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் இதனை வலியுறுத்தும் விதமாக தான் இந்த போராட்டம், அரசு எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், இல்லாவிட்டால் மாநில குழு ஒன்று கூடி அடுத்தகட்டமாக மிகப்பெரிய அளவில் போராட்டத்தை அறிவிக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.