DMDK: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கபடலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்நிலையில் கூட்டணி இல்லாமல் எந்த ஓர் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள திராவிட கட்சிகள், அடுத்ததாக பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது. ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடக்க இருக்கும் தேமுதிக மாநாட்டில் கூட்டணியை அறிவிப்பதாக பிரேமலதா கூறியுள்ள நிலையில், நேற்று தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்க மா.செ.க்கள் கையில் அதிகாரம் அளிக்கபட்டுள்ளதாக தகவல் கசிந்தது. இந்நிலையில் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, கூட்டணி யாருடன் என்பது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்டுள்ளோம். தொண்டர்கள் விரும்பும் கூட்டணியில் தேமுதிக இடம் பெரும் என்று கூறிய அவர், ராஜ்ய சபா சீட் குறித்து பேசப்பட்டது உண்மை தான். ஆனால் தற்போது சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், எங்கள் கவனம் அதில் திரும்பியுள்ளது என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது நடக்கும் போராட்டம் அனைத்திற்கும் தமிழக அரசு தீர்வு காண வேண்டும் என கேட்டு கொண்டார். மேலும் திமுக அளித்த வாக்குறுதிகள் 50 % தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதம் நிலுவையில் உள்ளது என்றும், தமிழத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வரும் தேர்தல் மாறுபட்ட தேர்தலாக இருக்கும், கூட்டணி கட்சிகளும் அமைச்சரவையில் அங்கம் வகிக்க வாய்ப்பு உண்டு என்று உறுதி கூறினார். தேமுதிக கூட்டணி இன்னும் உறுதியாகத பட்சத்தில் பிரேமலதாவின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் புது புயலை கிளப்பியுள்ளது.