DMDK TVK: 2026யில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும், சிறிய கட்சிகள், திராவிட கட்சிகள், புதிய கட்சிகள் என அனைவரும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தான் கூட்டணி குறித்த பேச்சுகளும் வேகமெடுத்துள்ளது. அந்த வகையில் திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் பாமக, தேமுதிக போன்ற மூன்றாம் நிலை கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நடிகர் விஜய்யின் தவெகவும் விசிக, தேமுதிக, பாமக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பாமகவின் ஒரு பகுதி அதிமுக பக்கமும், மற்றொரு பகுதி திமுக பக்கமும் இருக்கும் நிலையில் தேமுதிகவின் நிலைப்பாடு என்னவென்றே தெரியவில்லை. ஜனவரி மாதம் கடலூரில் நடக்கும் மாநாட்டில் கூட்டணியை அறிவிப்பதாக பிரேமலதா கூறியுள்ளார். இந்நிலையில் தமிழக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் உடன் நடத்திய ஆலோசனையில் தேமுதிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த பிரேமலதா நாங்கள் இன்னும் கூட்டணியை அறிவிக்கவே இல்லை. இது போன்ற வதந்திகளை பரப்பும் கட்சிக்கு அழிவு காலம் தான் ஏற்படும் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதன் காரணமாக இவர் அதிமுக கூட்டணியை புறக்கணித்ததாகவே பார்க்கப்படுகிறது. எனவே விஜய் கட்சிக்கு ஆதரவு அதிகம் இருப்பதால் அவரது கூட்டணியில் இணையலாம் என்று தேதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பிரேமலதாவிற்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், விஜய் ஆட்சியில் பங்கு தருவதாக கூறியதால் பிரேமலதாவும் இதற்கு தலையசைத்ததாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக தேமுதிக-தவெக கூட்டணி உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.