DMDK TVK: பீகார் தேர்தலை தொடர்ந்து தமிழகத்திலும் சட்டசபை தேர்தல் தொடங்க உள்ளது. பீகாரில் அபார வெற்றி பெற்ற NDA கூட்டணி அடுத்த கட்டமாக தமிழக தேர்தலில் ஆயத்தமாகி வருகிறது. பாஜக கூட்டணிக்கு மறுத்த தவெக அடுத்ததாக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. தவெக தலைமையில் தான் கூட்டணி, விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்று தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்நிலையில் விஜய்யுடன் கூட்டணியில் சேர பல்வேறு கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.
அந்த வகையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தவெக உடனான கூட்டணியை உறுதிப்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசிய போது, தேமுதிக இருக்கும் கூட்டணியே வெற்றி பெறும், இங்குள்ளவர்கள் அமைச்சர்கள் ஆகலாம். கூட்டணி அமைச்சரவையில் இடம் பெரும் வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதி பட தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து, விஜய் ஆட்சியில் பங்கு என்று கூறிய கருத்துடன் ஒத்துப் போவதால், தேமுதிக- தவெக கூட்டணி கூடிய விரைவில் அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னர் அதிமுக கூட்டணியிலிருந்த தேமுதிகவிற்கு நாடாளுமன்ற தேர்தல் காரணமாக முரண்பாடு ஏற்பட்டது.
அது மட்டுமல்லாமல், விஜயகாந்த் ஆட்சி காலத்தில் தேர்தல் நேர கூட்டணியின் போது இருந்த மரியாதையும், மதிப்பும் ஆட்சியில் அமர்ந்த பின் இல்லை. மேலும் சட்டசபை கூட்டத்திலும் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் விஜயகாந்தின் கருத்து எடுபடாமல் இருந்தது. இதனால் இந்த தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்றும் பிரேமலதா முடிவேடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இந்நிலையில் விஜய் தவெக உடன் கூட்டணி அமைக்கும் கட்சிக்கு ஆட்சியில் அதிகாரம் தருவதாக கூறியது, பிரேமலதாவிற்கு ஜாக்பாட் அடித்தது போல அமைந்து விட்டது. இதன் காரணமாக பிரேமலதா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.

