ADMK DMDK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் வேட்பு மனுக்களை அளிக்கும் பணியும் மும்முரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆளுங்கட்சியாக உள்ள திமுக உடன் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக மற்றும் இன்னும் சில கட்சிகள் கூட்டணியில் இருந்து வருகின்றன. அதிமுக உடன் ஒரு வருடத்திற்கு முன்பு பாஜக கூட்டணி அமைத்த நிலையில் அண்மையில் தமாகா-வும் இணைந்துள்ளது.
இதனை தொடர்ந்து மூன்றாம் நிலை கட்சிகளான பாமகவும், தேமுதிகவும் இன்னும் கூட்டணி முடிவு அறிவிக்காமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. தேமுதிக பொதுச்செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் அதிமுக, திமுக என இரண்டு பக்கமும் கதவை திறந்து வைத்துள்ளார். ராஜ்ய சபா சீட் தருபவர்களுடன் தான் கூட்டணி என்று பிரேமலதா உறுதியாக கூறி வருகிறார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு, சென்னை வருகை புரிந்த பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர், பியூஷ் கோயல் இபிஎஸ்யுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் பாஜகவிற்கு 23 தொகுதிகளும், ஓபிஎஸ், தினகரனுக்கு குறிப்பிட்ட தொகுதிகளும் தேமுதிகவுக்கு 6 தொகுதிகளும் ஒதுக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் ஆத்திரமடைந்த பிரேமலதா, நாங்கள் இன்னும் கூட்டணியை அறிவிக்கவே இல்லை. எந்த கட்சி இந்த மாதிரியான செய்திகளை வெளியிட்டதோ, அவர்களின் அழிவு காலம் ஆரம்பம் என்று கூறியிருந்தார்.
இதனால் அதிமுக- தேமுதிக கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்று நினைத்த சமயத்தில், தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, கடலூரில் நடைபெற உள்ள விஜயகாந்த் குருபூஜைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பின் இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை கூட்டணிக்குறியதாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இதன் காரணமாக தேதிமுகவிற்கு ராஜ்யசபா சீட் தருவதற்கு இபிஎஸ் சம்மதித்து விட்டார் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் அதிமுக உடன் பிரேமலதாவிற்கு இருந்த கருத்து வேறுபாடுகள் இதன் மூலம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.