DMK VCK: கடந்த சில ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்து வரும் கட்சி விசிக. திமுக கூட்டணியிலிருந்து பல்வேறு கட்சிகள் விலகிய போதும் கூட விசிக பிரியாமல் இருக்கிறது. ஆனால் கூட்டணியில் இதற்கான மதிப்பும் மரியாதையும் குறைந்து வருவதாக அக்கட்சி நினைக்கிறது. இது அவ்வபோது விசிகவின் கூட்டத்திலும், பிரச்சாரத்திலும் எதிரொலித்து வருவதோடு, திமுகவுடன் சச்சரவு உள்ளதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஏற்கனவே அதன் ஆட்டத்தை ஆரம்பித்த நிலையில், விசிகவும் திமுகவிற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருவது மட்டுமல்லாமல், இதற்கு முன் கொடுத்த தொகுதிகள் போதாது, இந்த தேர்தலில் அதிக தொகுதிகள் வேண்டுமென கூறி வருகிறது. அந்த வகையில், விசிகவின் நிர்வாகி சங்கத்தமிழன் அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் பேசிய போது, திமுக கூட்டணியில் திமுகவிற்கு அடுத்து அதிக செல்வாக்கு கொண்ட ஒரே கட்சி விசிக.
ஆனால் காங்கிரஸுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லையென்பது அனைவரும் அறிந்த ஒன்று. இப்படி இருக்கையில் விசிகவிற்கு குறைந்த தொகுதிகளையும், காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளையும் வழங்குவது எந்த விதத்தில் நியாயம். இதனை எப்படி எங்கள் கட்சியிலுள்ள தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவர் இதற்கு முன் ஒரு முறை விசிக அதிக தொகுதிகளுக்காகவும், ஆட்சியில் பங்கையும் பெறுவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இவ்வாறு தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்து திமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருவதால் ஸ்டாலின் மிகவும் குழப்பத்தில் உள்ளார் என்று திமுக வட்டாரங்கள் கூறி வருகின்றன. மேலும், விசிகவின் நிபந்தனைக்கு திமுக சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் திருமாவளவனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது. இந்நிலையில், இதனை பயன்படுத்த நினைக்கும் அதிமுக-பாஜக கூட்டணி திருமாவளவனை தம் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

