TVK CONGRESS: திமுகவுடனான தொடர் கூட்டணி தேசிய அரசியலுக்கு பெரிதாக பலன் அளிக்காது என்ற கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் உருவாகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணியில் இருந்த போதும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனி அடையாளத்தை நிலைநிறுத்த முடியாதது குறித்து பல தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தில் புதிய அரசியல் முகமாக உருவெடுத்து வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை நோக்கி கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக ராகுல் காந்தி புதிய தலைமுறை, புதிய சிந்தனை என்ற கோஷத்துடன் மாநில அளவிலான இளம் தலைவர்களுடன் நெருக்கம் பேண முயற்சித்து வருகிறார். அதேபோல், விஜயும் சமீபத்தில் தன்னுடைய கட்சியின் நோக்கங்களை மக்கள் ஆட்சியாகவும், ஊழலற்ற ஆட்சியாகவும் வலியுறுத்தி வருகிறார்.
கரூரில் நடந்த விபத்துக்குப் பிறகு விஜய் காட்டிய உணர்ச்சி பூர்வமான நடவடிக்கைகள், மக்களிடம் அவருக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. இதனையடுத்து, அடுத்தடுத்த தேர்தல்களில் திமுகவுடனான கூட்டணிக்கு பதிலாக, காங்கிரஸ்-தவெக கூட்டணி உருவாகும் வாய்ப்பு அதிகளவில் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இத்தகைய கூட்டணி உருவானால், அது தமிழக அரசியலுக்கு மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் புதிய சக்தியாக உருமாறும் என அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர். மேலும் திமுகவுக்கு இது ஒரு பெரிய சவாலாகவும், காங்கிரசுக்கு புதிய ஊட்டமாகவும் அமையலாம் என்ற மதிப்பீடும் நிலவுகிறது.

