ADMK DMK BJP: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக கட்சிகளை விட தேசிய கட்சிகளே அதிகளவில் முனைப்பை காட்டி வருகின்றன என்றே கூறலாம். பீகாரில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று சாதனை படைத்த பாஜக, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது. அதிமுகவிற்கும், பாஜகவிற்கு பல்வேறு முரண்பாடுகள் இருப்பது நாடறிந்த ஒன்று. இப்படி இருக்கும் சமயத்தில் இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்தது பேசு பொருளானது.
இந்த கூட்டணி எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் இருந்தாலும், அது அமித்ஷாவை நம்பியே செயல்படுகிறது என்ற கருத்து மேலோங்கி வருகிறது. இது அதிமுக அல்ல, அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகம், இதன் தலைமையிடம் டெல்லியில் உள்ள அமித்ஷாவின் வீடு என்று பலரும் கூறுகின்றனர். இவ்வாறு திமுகவும், அதிமுகவும் பாஜகவை மையப்படுத்தி சண்டையிட்டு வரும் நிலையில் அதிமுக, பாஜகவிடம் அடிமையாக இல்லை. திமுக தான் அடிமையாக இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மேலும் திமுகவிற்கும், பாஜகவிற்கும் எழுதப்படாத ரகசிய ஒப்பந்தம் எப்போதும் இருக்கிறது, 2026 தேர்தலுக்கு பின் திமுக, பாஜகவிற்கு ஆதரவாக செயல்படும் என்றும் பேசியுள்ளார். இவரின் இந்த கருத்து அதிமுக-பாஜக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது. அதிமுகவும், பாஜகவும் திமுகவை வீழ்த்த வேண்டுமென்ற நோக்கில் செயல்பட்டு கொண்டிருக்க, இவர் திமுகவும், பாஜகவும் விரோதிகள் அல்ல, நண்பர்கள் என்பது போல ஒரு கருத்தை கூறியுள்ளதால் இதன் மீது பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் அதிமுக தரப்பிலும் இவருக்கும் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

