விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாயும் திமுக! பதுங்கும் எதிர்க்கட்சிகள்
விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடை தேர்தலில் நடைபெற வேண்டிய பணிகளை கவனிக்க திமுக தேர்தல் பணி குழுவை அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்த உடனே வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் பணிக்குழு அறிவிப்பு என படு வேகமாக திமுக செயல்பட்டு வருகிறது. இது எதிர்க்கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததை அடுத்து விக்ரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி வருகின்ற ஜூலை 10ஆம் தேதி விக்ரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதி தொடங்கி ஜூன் 21ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மற்ற கட்சிகள் போட்டியிடுவது பற்றி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் திமுக வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளில் களமிறங்கியுள்ளது. அதன்படி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இவர் அக்கட்சியின் விவசாய தொழிலாளர் மற்றும் அணியின் மாநில செயலாளர் ஆவார். இது மட்டும் இன்றி திமுக சார்பில் 11 பேர் அடங்கிய தேர்தல் பணி குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தேர்தல் பணிக்குழு:
திமுக துணை பொதுச்செயலாளர்: பொன்முடி
கொள்கை பரப்புச் செயலாளர்:
எஸ். ஜெகத்ரட்சகன்
காணை மத்திய ஒன்றியம்: மாண்புமிகு கே.என் நேரு
விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியம்: எ.வா வேலு
விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியம்: எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
காணை வடக்கு ஒன்றியம்: அர.சக்கரபாணி
கோலியனூர் மேற்கு ஒன்றியம்: தா. மோ. அன்பரசன்
விக்கிரவாண்டி மத்திய ஒன்றியம்: எஸ்.எஸ் சிவசங்கர்
விக்ரவாண்டி பேரூர்: சி.வி கணேசன்
காணை தெற்கு ஒன்றியம்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டாக்டர் ஆர்.லட்சுமணன் எம்.எல்.ஏ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிகளுக்காக திமுக ஒன்றியத்திற்கு ஒரு அமைச்சர் என்ற விதத்தில் நியமித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விக்கிரவாண்டியில் உள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் வரும் ஜூன் 14ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தல் செயல்வீரர்கள் கூட்டத்தில் இந்த தேர்தல் பணிக்குழுவினர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.