தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது, அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், அவருடைய மகனும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சென்ற சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக களமிறக்கப்பட்டு வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து அவர் அப்போதே அமைச்சராக பொறுப்பேற்பார் என்று பலரும் தெரிவித்து வந்தார்கள். ஆனாலும் நிதானமாக சிந்தித்த ஸ்டாலின் அவருக்கு அமைச்சர் பொறுப்பை வழங்கவில்லை.
இந்த நிலையில், கட்சியில் இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து அவருக்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று கோரிக்கை எழுப்பி வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
திருச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முகாமிட்டிருந்த சூழ்நிலையில், இந்த தீர்மானம் கட்சியினரிடையே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தனக்கு அமைச்சர் பதவி கேட்டு யாரும் தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் கட்சியினருக்கு அறிக்கை மூலமாக வேண்டுகோள் விடுத்தார்.
இப்படியான நிலையில், திமுகவின் முதன்மை செயலாளர் கே. என்.நேருவின் விருப்பத்தை அப்படியே நிறைவேற்றும் விதத்தில் மத்திய மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நடந்தது. திருச்சி தில்லைநகர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமை தாங்கினார் என்று சொல்லப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கவேண்டும் என தெரிவித்தும், அதனை அவர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தும், சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் இப்படி தீர்மானம் நிறைவேற்றிய தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது அவருடைய பேச்சை அவருடைய கட்சியினரே கேட்கவில்லையோ என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.