BJP DMK: பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, தனது இரண்டாவது கட்ட சுற்றுப்பயணம் இன்று மாலை பெரம்பலூரிலும், அதன் பின்னர் அரியலூரிலும் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்தின் போது தமிழக அரசின் ஆட்சியில் நிலவி வரும் குறைபாடுகளை மக்களிடம் எடுத்துரைக்க உள்ளேன்.
தஞ்சாவூரில் மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகளை நேரில் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறும் நிகழ்வும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நெல்லின் கொள்முதல் ஈரப்பதம் 17 சதவீதமாக உள்ளது. அதை 22 சதவீதமாக உயர்த்தி வாங்குவதற்கான ஆய்வுக் குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. அந்த பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்யவும் இன்று மற்றும் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன் என்றார். மேலும் அவர், தமிழக அரசு நெல் கொள்முதலை சரியாக கையாளவில்லை. உடனடியாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் தாமதம் செய்வது விவசாயிகளை பாதிக்கிறது.
இதற்கிடையில் கொள்முதல் பணியில் 40 ரூபாய் வரை கமிஷன் கேட்கப்படுவதாக புகார்கள் வருகின்றன என குற்றஞ்சாட்டினார். அதே நேரத்தில், தென் மாவட்டங்களில் நடைபெறும் கனிம வளக் கொள்ளையில் ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்காற்றுவதாக அன்புமணி கூறியிருப்பதையும் அவர் குறிப்பிட்டார். திருநெல்வேலி மட்டுமல்ல, தமிழகமெங்கும் ஆளும் கட்சியினர் கல்குவாரி லாரிகளுக்கு குறிப்பிட்ட தொகை வசூலித்து வருகின்றனர். அதிகாரிகளை மதிக்காத கூட்டணியே திமுக கூட்டணி என நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்தார்.

