
PMK DMK: பாட்டாளி மக்கள் கட்சி தற்போது தந்தைக்கும் மகனுக்கும் நிலவி வரும் தலைமை போட்டியால் இரண்டாக பிரிந்துள்ளது. இதனால் ராமதாஸின் ஆதரவாளர்கள் அன்புமணி மீது பழி சுமத்துவது, அன்புமணியின் ஆதரவாளர்கள் ராமதாஸ் மீது பழி சுமத்துவது போன்ற செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் வகையில் பாமகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரது மகனுக்கு இளைஞரணியின் தலைவர் பதவியை வழங்கினார்.
மேலும் தன்னுடைய மூத்த மகள் காந்திமதிக்கு அண்மையில் செயல் தலைவர் பதவியையும் வழங்கினார். இவ்வாறு அன்புமணிக்கு எதிரான அடுத்தடுத்த செயல்களை செய்து வரும் ராமதாஸ் தற்போது, அன்புமணி கடுமையாக எதிர்த்து வரும் கட்சியான திமுக உடன் கூட்டணி சேர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனை நடக்க விடாமல் தடுக்க அன்புமணி பல்வேறு முயற்சிகளை கையில் எடுப்பதாக சிலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் திமுகவின் ஊழலையும், அதன் செயல்பாடுகளையும் கண்டித்து அன்புமணி நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று அன்புமணி தலைமையில், சேலம் மாவட்டம் மேட்டரில், தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைபயணம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, கோட்டையூர்-தருமபுரி மாவட்டம், ஓட்டனுர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டுமென்பது இப்பகுதி மக்களின் 75 ஆண்டுகால கோரிக்கை.
45 ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான அறிவிப்பை வெளியிட்ட திமுக அரசு அதை இன்னும் செயல்படுத்தாமல் கிடப்பில் வைத்துள்ளது என்று குற்றம் சாட்டினார். திமுக அரசு அறிவிப்பை மட்டும் தான் வெளியிட்டு கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 30 மணல் குவாரிகளை திறக்க போவதாக வெளியான அறிவிப்பை தமிழக அரசு திரும்ப பெற வேண்டுமென்று அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், திமுக கூட்டணி இந்த தேர்தலில் நிச்சயம் தோல்வியடையும் என்று உறுதிபட கூறினார்.
