DMK: அதிமுகவில் ஜெயலலிதா இறந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தேர்ந்தெடுக்கபட்டார். பிறகு தனது பதவியை ராஜினாமா செய்த இவர், என்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்று கூறினார். இவருக்கு பிறகு சசிகலாவின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டார். இவர் இந்த பதவிக்கு வந்த பிறகு சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோரை கட்சியிலிருந்து அடியோடு நீக்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த டிடிவி தினகரன் அமமுக கட்சியை துவங்கினார். ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை தொடங்கினார். பின்னர் ஓபிஎஸ்யும், தினகரனும் நல்ல நட்புறவில் இருந்தனர். இவர்கள் இருவரின் ஒரே குறிக்கோள் இபிஎஸ் வீழ்த்த வேண்டுமென்பது தான். இந்நிலையில் ஓபிஎஸ், அவரது பேட்டியில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வந்ததால் அவர் விஜய்யுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது புதிய திருப்பமாக சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் திமுகவிற்கு சாதகமாக பேசியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக வெற்றி பெறும் என்று முதல்வர் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதுள்ள சூழ்நிலையில் அனைத்து கட்சிகளும் பிரிந்து கிடக்கின்றன. அதிமுக, பாமக, போன்ற கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. ஆனால் திமுக அரசு கூட்டணியை சரியாக கையாள்கிறது. இப்படி இருக்க அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்புக்கு அதிகளவில் வாய்ப்பிருப்பதாக மக்கள் பேசி கொள்கிறார்கள், நான் கூறவில்லை என்று சூசகமாக பதிலளித்தார். இவரின் இந்த பதில் திமுக பக்கம் அவர் மெல்ல மெல்ல சாய்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாகவே பார்க்கப்படுகிறது. இதனால் இவர் கூடிய விரைவில் திமுகவில் இணைவார் என்ற கருத்தும் நிலவுகிறது.

