
ADMK DMK TVK: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக வெற்றிக் கழகத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது, அரசியல் வட்டாரங்களில் பெரிய விவாதமாகியுள்ளது. திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக, தமிழக வெற்றிக் கழகம் அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் என்ற வலியுறுத்தலும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில், தமிழக வெற்றி கழகத்தின் கொடி பறந்தது இதன் முதற்கட்டமாக பேசப்பட்டது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார், தமிழக வெற்றிக் கழகம் அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார். மேலும், தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுப்பவர் தான் நல்ல தலைவர் என்று கூறிய அவர், பவன் கல்யாண் எடுத்த அரசியல் முடிவை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டார். கூட்டணி விவகாரத்தில் திமுக தலைமை சரியாக செயல்படுவதாகவும், ஆனால் வைகோ சரியான முடிவு எடுக்காததால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக வெற்றிக் கழகத்தை ஆண்டவன் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என்றும் எச்சரித்தார். அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் சேர வேண்டும் என்று நேரடியாக அழைப்பை விடுத்தார். இது அதிமுக தன் அரசியல் பலம் குறைந்ததால், தமிழக வெற்றிக் கழகத்தை நம்பி தேர்தலில் களம் காண முயற்சிக்கிறதா என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது. கூட்டணிக்கான எடப்பாடியின் முனைப்பே தற்போது தமிழ்நாட்டு அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
