DMK: செந்தில் பாலாஜி அவருடைய அரசியல் பயணத்தை திமுகவிலிருந்து தொடங்கினார். பின்னர், அதிமுகவில் இணைந்த இவருக்கு அமைச்சர், மாவட்ட செயலாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டது. ஜெயலலிதா இறந்த சமயத்தில், அதிமுக ஆட்சியில் குழப்ப நிலை நிலவிய போது, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட இவர், முதல்வரை மாற்றுமாறு ஆளுநரிடம் மனு அளித்ததற்காக, சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர். பின்னர் 2018 அன்று திமுகவில் இணைந்தார்.
கரூரின் முகமாக அறியப்படுபவர் செந்தில் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது. செந்தில் பாலாஜி எந்த தொகுதியில் வெற்றி பெற்றாலும் அங்கு அவருடைய செல்வாக்கையும், தனித்தன்மையையும் நிலை நாட்டி விடுவார். ஆனால் கட்சி மாறி கொண்டே இருக்கும் இவர், எந்த கட்சியிலும் நிலைத்திருந்ததில்லை. இதுவே இவருக்கு பெரிய பாதகமாக அமைந்தது மட்டுமல்லாமல் இதனை வைத்து எதிர்க்கட்சிகள் இவரை விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக மண்டல வாரியாக திமுகவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வரும் வேளையில், மேற்கு மண்டல பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செந்தில் பாலாஜி மேற்கு மண்டலத்தில் திமுகவை வளர்ப்பதை விட, அந்த பகுதியில் தன்னை முன்னிறுத்தி கொள்ளவே முயற்சித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், தன்னுடைய ஆதரவாளர்களை வைத்து திமுக தலைமையை எதிர்க்க கூட அவர் தயங்க மாட்டார் என்று உடன் பிறப்பிறப்புகள் திமுக தலைமையிடம் அறிவுறுத்தி வருவதாக தகவல் வந்துள்ளது.

