ஊரடங்கு நேரத்தில் மக்கள் துன்பத்தை கண்டுகொள்ளாமல் பணமாலையுடன் பிறந்தநாளை கொண்டாடிய திமுக எம்.எல்.ஏ

Photo of author

By Ammasi Manickam

ஊரடங்கு நேரத்தில் மக்கள் துன்பத்தை கண்டுகொள்ளாமல் பணமாலையுடன் பிறந்தநாளை கொண்டாடிய திமுக எம்.எல்.ஏ

கொரோனா பாதிப்பினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்த மற்ற அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளதால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தினக்கூலி வேலைக்கு செல்லும் பெரும்பாலான குடும்பங்களில் அன்றாட உணவுக்கே வழியில்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் இந்த சூழ்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்எல்ஏ பணமாலையுடன் பிறந்த நாளை கொண்டாடிய சம்பவம் பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 1683 பேர் இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 20 பேர் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள், தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அரசுடன் இணைந்து போராடி வருகின்றனர். குறிப்பாக பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தினம் தினம் மக்களின் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வு அறிக்கைகள் மற்றும் காணொளி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள திமுக மக்கள் நலனுக்காக போராடாமல் வழக்கம் போல குறை கூறும் அரசியலையே முன்னெடுத்து வருகிறது.இவ்வாறு தமிழக அரசை விமர்சிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஒவ்வொரு கருத்திற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தக்க பதிலடி கொடுத்து வருகிறார். இறுதியாக திமுக தலைவர் என்ன மருத்துவரா அவரிடம் ஆலோசனை கேட்க என்று கடுமையாக சாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கொரோனாவை எதிர்த்து அரசுடன் இணைந்து பணியாற்ற மறந்த திமுகவினர் விளம்பரத்திற்காக அவ்வப்போது நேரிடையாக நிவாரண உதவிகளை வழங்கும் நிகழ்சிகளை நடத்தி வந்தனர். சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ஸ்டாலினே அவருடைய தொகுதியில் மக்களை சந்தித்து நிவாரண உதவி வழங்கியது கடும் விமர்சனத்தை கிளப்பியது.

இந்நிலையில் இவ்வாறு மக்கள் நலனை மறந்து திமுக செயல்படுவதற்கு அடுத்த உதாரணமாக சிங்காநல்லூர் எம்எல்ஏ நா. கார்த்திக்கின் பிறந்த நாள் கொண்டாட்டம் தற்போது சமூக வலைத்தளங்களில் சிக்கியுள்ளது.

கோயம்பத்தூர் சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ நா.கார்த்திக்கிற்கு கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி பிறந்த நாளாகும். இதனையடுத்து அன்றைய தினம் அவர் தனது ஆதரவாளர்களுடன் பணமாலை அணிந்து உற்சாகமாக பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

இதனையடுத்து இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படத்தை திமுக நிர்வாகியான நவீன் கார்த்திக் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் பதிவிட்ட அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் அவருக்கு எதிராக கடுமையான விமர்சனம் எழுந்து வருகிறது. குறிப்பாக அவரை பொதுமக்கள் மட்டுமின்றி, திமுக உடன்பிறப்புகளே கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸால் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள இந்த நிலையில், மக்கள் பணமில்லாமல் அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் திமுக எம்எல்ஏ பணமாலை அணிந்து அவருடைய பிறந்த நாளை கொண்டாடியது பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அரசை குறை கூறுவதை விட்டு, வாக்களித்த மக்களுக்காக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசுடன் இணைந்து செயல்பட முயற்சிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசின் செயல்பாட்டை விமர்சிக்கும் திமுகவின் உண்மை முகம் இதன் மூலமாக வெளிக்காட்டப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அதோடு, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பாமகவின் இளைஞர் அணி தலைவரும்,முன்னாள் மத்திய சுகாாரத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் போன்றோர் மக்கள் நலனுக்காக தினமும் செயல்பட்டு அவர்களின் துயர் நீக்க அயராது உழைத்து வரும் சூழலில், இப்படியும் ஒரு மக்கள் பிரதிநிதியா என சமூக வலைதளங்களில் பொது மக்கள் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.