DMK TVK: சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட தொடங்கியுள்ள நிலையில், கூட்டணி வியூகங்களும் வலுபெற தொடங்கியுள்ளன. 2026 தேர்தல் களம் எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை புதிய வேகமெடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது விஜய்யின் வருகை. விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். இவர் கட்சி ஆரம்பித்தது முதலே, திமுக தான் தவெகவின் அரசியல் எதிரி என்று கூறி வருகிறார்.
அது மட்டுமல்லாமல், நான் தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில் தான் கூட்டணி போன்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்காத விஜய் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுவதை அனைத்து கட்சிகளும் விமர்சித்து வந்தன. மேலும் முதல் தலைமுறை வாக்காளர்களும், இளைஞர்களும், 70 வருடங்களுக்கும் மேலாக தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி அமைத்து வரும், அதிமுக, திமுகவை விட்டு விட்டு தவெகவிற்கு ஆதரவு தெரிவித்தால், தவெகவின் தொண்டர்களை அரசியல் அறிவு இல்லாதவர்கள் என்றும், தற்குறிகள் மற்றும் வேறு சில தகாத வார்த்தைகளாலும் திமுகவை சேர்ந்தவர்கள் ஊடகங்களில் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், திமுக எம்எல்ஏ எழிலன், தவெகவிற்கு ஆதரவாக ஒரு கருத்தை கூறியிருக்கிறார். தவெகவில் இருப்பவர்கள் ரசிகர் கூட்டமாகவே இருந்தாலும், அவர்களை விமர்சிக்காமல், அவர்களுடன் உரையாட தொடங்க வேண்டும் என்று கூறினார். மேலும், தவெக இளைஞர்கள் தற்குறி அல்ல, நம்ப பசங்க தான் என்று அவர் கூறியது தற்போது பெரிய விவாதமாகியுள்ளது. இவரின் இந்த கருத்து தவெகவிற்கு சாதகமாக இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர். இதன் காரணமாக ஸ்டாலின் இவர் மீது கடும் கோபத்தில் உள்ளார் என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

