PMK DMK: பாமகவில் சமீப காலமாகவே அன்புமணிக்கும், ராமதாசுக்கும் சச்சரவு நிலவி வருகிறது. இதனால் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணியை தனது மகன் என்று கூட பாராமல் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். ஆனால் தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது.
மேலும் கட்சியின் சின்னமும் அன்புமணிக்கு தான் எனக் கூறியது. இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் இதனை சட்ட ரீதியாக எதிர்க்கொள்வதாக அறிவித்தார். அடுத்து அன்புமணி கட்சியின் முகவரியை மாற்றியதாக ராமதாஸ் தரப்பு வழக்கு தொடுத்தது. ஆனால் இதற்கும் அன்புமணியின் தரப்பு மறுப்பு தெரிவித்திருந்தது. இந்த பிரச்சனை தீவிரமாகி கொண்டே செல்வதால் ராமதாஸ் டெல்லி சென்று நரேந்திர மோடியை சந்திக்க அனுமதி கேட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த சமயத்தில் ராமதாஸ் திமுக உடன் நெருக்கத்தில் இருக்கிறார் என்றும் பலர் கூறி வந்தனர். இந்த பிரிவினை நீள்வதற்கு திமுக திரை மறைவிலிருந்து செயல்படுவதாகவும், கட்சி ஒற்றுமையாக இருந்தபோது ராமதாஸ் மீது பல்வேறு சமூக ஊடகங்கள் அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தி அவரை விமர்சித்து வந்தனர். இதனை சரி செய்ய அவர்கள் மீது புகார் கொடுத்தும், திமுக அரசு அவர்களை கைது செய்யாமல், அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்தது.
மேலும் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை தருவதாக கூறி இன்று வரை அலைக்கழித்து வருகிறது. இப்படியான சூழலில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் திமுகவை புகழ்ந்து பேசுவதும், அவர்களுடன் இணக்கமாக இருப்பதும் தான் எங்களுக்கு இப்படியான சந்தேகத்தை எழுப்பியுள்ளதென அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.