
PMK DMK VSK: சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், திமுகவும் கூட்டணி வியூகங்களை வகுத்து வருகிறது. அதிலும் பாமக,தேமுதிகவின் கூட்டணி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸிடம் திமுக உடன் கூட்டணி அமைக்கப்படுமா என்று கேட்ட போது, திமுக உடன் கூட்டணியா இல்லையா என்பது அடுத்த வருட தொடக்கத்திலோ, இந்த வருட இறுதியிலோ அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இவரின் இந்த பதில் திமுக-பாமக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை தீவிரமாக நடைபெற்று வருவதை உணர்த்துகிறது. பாமக திமுக கூட்டணியில் இணைந்தால், விசிக கூட்டணியில் தொடருமா என்பது தான் தற்போதைய கேள்வியாக உள்ளது. ஏனென்றால் பாமகவும், பாஜகவும் இருக்கும் கூட்டணியில் விசிக தொடராது என்று திருமாவளவன் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல், ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைந்தால் விசிக கூட்டணியில் தொடருமா என்று திருமாவிடம் செய்தியாளர்களால் கேள்வி எழுப்பிய போது, பார்க்கலாம் என்று பதிலளித்துள்ளார்.
இதன் மூலம் ராமதாஸ் கூட்டணியில் இணைந்தால் திருமாவளவன் வெளியேறுவார் என்பது தெளிவாகிறது. திமுகவுடன் இணைந்து பல தேர்தல்களை சந்தித்து, திமுகவின் வாக்கு வங்கியில் கணிசமான அளவு மாற்றத்தை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றி பெற செய்த விசிக கூட்டணியிலிருந்து விலகுவது 2026 தேர்தலில் திமுகவிற்கு மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக தலைமை என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
