ADMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதமே இருக்கும் நிலையில், அதிமுக, திமுக, தவெக, நாதக, பாமக, தேமுதிக போன்ற முன்னணி கட்சிகள் பலவும் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. தவெக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளின் கூட்டணி இன்னும் உறுதி செய்யபடாத நிலையில், திராவிட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் திமுக கூட்டணி கட்சிகள் அதன் தலைமையிடம் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என வலியுறுருத்தி வருகிறது.
இதனால் திமுக கூட்டணி பலம் குறைந்து வந்தது. கூட்டணி பலம் குறைந்தாலும், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவினை அதனை சமன் செய்யும் வகையில் அமைந்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் நீக்கம் அதிமுகவிற்கு எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமோ அந்த அளவிற்கு திமுகவிற்கு சாதகமாக முடியும். ஏனென்றால் செங்கோட்டையன் மேற்கு மண்டலத்தில் நல்ல செல்வாக்கு மிக்க அமைச்சர். அப்படி இருக்க அவரை கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பதவியிலிருந்தும் நீக்கியது, அப்பகுதி மக்களிடையே இபிஎஸ் மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அந்த பகுதியில் திமுக அதன் செல்வாக்கை நிலை நாட்ட முயன்று வருகிறது. மேலும் மேற்கு மண்டலம் இபிஎஸ்யின் கோட்டையாக இருந்தாலும், அதிமுக ஆட்சி காலத்தை விட, திமுக ஆட்சியில் தான் இந்த பகுதியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்று ஸ்டாலின் கூறியது குறிப்பிடத்தக்கது. செங்கோட்டையனின் நீக்கம் மற்றும், மேற்கு மண்டலத்தில் திமுக அதன் பணிகளை விரிவுபடுத்தியது போன்ற செயல்பாடுகள் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் வாக்காளர்களின் வாக்குகளை திமுக பக்கம் நகர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

