DMK: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், திராவிட கட்சிகள் வெற்றி பெறுவதற்கான கணக்குகளையும், மூன்றாம் நிலை கட்சிகளும், சிறிய கட்சிகளும் எந்த திராவிட கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் தீவிர ஆலோசனையில் உள்ளது. 2021 முதல் 2026 வரை திமுக ஆட்சியில் மக்களுக்கு நிறைய அதிருப்திகள் வெளிப்பட்டிருகின்றன. அதனை சரி செய்து 7 வது முறையும் ஆட்சி அமைக்க வேண்டுமென திமுக போராடி வரும் நிலையில், இபிஎஸ் பதவி ஏற்றதிலிருந்தே தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென போராடி வருகிறது. இந்த இரு கட்சிகளுக்கு இடையேயான போட்டி எப்போதும் நிலவி வரும் ஒன்று.
தற்போது புதிதாக, தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சி உதயமாகி திமுகவை தோற்கடித்து தமிழகத்தில் வலுவான கட்சியாக உருமாற வேண்டுமென பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. இந்நிலையில், அதிமுகவிலிருந்து இபிஎஸ்யால் வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ் அதிமுக உரிமை மீட்புக் குழு ஒன்றை ஆரம்பித்தார். இந்த குழுவில் இவருக்கு ஆதரவாக மனோஜ் பாண்டியன், பெங்களூரு புகழேந்தி, வைத்தியலிங்கம் உள்ளிட்ட பலரும் இருந்தனர். இவர்களில் தற்போது ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருப்பது வைத்தியலிங்கம் மட்டும் தான். மனோஜ் பாண்டியன் இரு தினங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்து விட்டார். இவரை தொடர்ந்து வைத்தியலிங்கமும் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதற்கு காரணமாக பார்க்கப்படுவது என்னவென்றால் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானவர் வைத்தியலிங்கம். தற்போது இந்த பகுதியில், அதிமுகவில் பல்வேறு அணிகள் உருவாகி உள்ளதால் இவரின் மவுசு குறைந்துள்ளது என்பதை உணர்ந்த அவர் திமுக உடன் சேர முடிவெடுத்துள்ளார் என்று பலரும் கூறி வருகின்றனர். அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தை திமுக வசம் கொண்டு வர வேண்டுமென்று, ஸ்டாலின் திட்டம் தீட்டி கொண்டிருக்கும் நிலையில், அதிமுகவின் முக்கிய புள்ளி ஒரத்தநாடு தொகுதியுடன் வந்து இணைய போகும் செய்தி திமுகவை கொண்ட்டாடத்தில் ஆழ்த்தியுள்ளது.

