தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்காக தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள்.
அதோடு கடந்த 28ம் தேதி இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி சென்ற 6ம் தேதி வரையில் நடைபெற்றது.
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை விட்டு விலகி தனித்து களம் காண இருக்கிறார்கள்.
தமிழகத்தைப் பொருத்தவரையில் பாஜக எப்படியாவது காலூன்றி விடவேண்டும் என்று பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அதன் பலனாக தற்போது தான் அந்த கட்சி மெல்ல மெல்ல, தமிழகத்தில் எழுந்து நிற்க தொடங்கியிருக்கிறது.
இந்த நிலையில், சென்னை தி நகரில் இருக்கின்ற பாஜகவின் தலைமை அலுவலகத்தில் இன்று அதிகாலை 1 .30 மணியளவில் திடீரென்று மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது, இதனால் அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள் முன்னதாக அலுவலகத்தின் கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்ததால் யாருக்கும் எந்தவிதமான ஆபத்தும் மற்றும் சேதமும் உண்டாகவில்லை.
3 மதுபாட்டில்கள் உள்ளிட்டவற்றில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கிறது என்று முதல்கட்ட தகவல்கள் தெரிய வந்திருக்கிறது. சம்பவ இடத்தில் துணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தில் அலுவலகத்தில் தரைப்பகுதியில் வெடிகுண்டு வெடித்ததற்கான தடயங்கள் காணப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். அவர் கர்த்தா வினோத் என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறார் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக அந்தக் கட்சியைச் சார்ந்த கராத்தே தியாகராஜன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, இரவு 1 .30 மணியளவில் பெட்ரோல் குண்டு ஒன்று வீசப்பட்டிருக்கிறது. சென்ற 15 ஆண்டுகளுக்கு முன்னர் இதுபோன்ற சம்பவத்தில் திமுகவின் பங்கு இருந்தது. இந்த சம்பவத்தில் தமிழக அரசை தாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.
இதன்மூலமாக அவர் மறைமுகமாக திமுகவை சந்தேகப்படுவதாக தெரிவிக்கிறார் என்றே அர்த்தமாகிறது. இதுதொடர்பாக காவல் துறையினருக்கும் தெரிவித்திருக்கிறோம் இதுபோன்ற சம்பவங்கள் போன்றவற்றை கண்டு அச்சம் கொள்ளாது என்று தெரிவித்திருக்கிறார்.