வீட்டில் எப்பொழுதும் தெய்வீக சக்தி நிறைந்திருக்க நிலை வாசலில் இதை செய்யுங்கள்..!!

Photo of author

By Janani

வீட்டில் எப்பொழுதும் தெய்வீக சக்தி நிறைந்திருக்க நிலை வாசலில் இதை செய்யுங்கள்..!!

Janani

பொதுவாக ஒரு வீட்டை கட்டும் பொழுது முதல் முறையாக பூமி பூஜை என்பதை செய்வார்கள். அதற்கு அடுத்தபடியாக மிக முக்கியமாக செய்யக்கூடிய பூஜை என்றால் வாசற்கால் வைக்கும் பூஜை. இதற்கு நிலை வாசல் என்ற பெயரும் உண்டு. அதாவது நிலைத்த தெய்வீக சக்திகள் அந்த இடத்தில் இருந்து அந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டும், என்பதற்காகத் தான் நிலைவாசல் பூஜை என்பது செய்யப்படுகிறது.

வீடு என்பது நாம் தங்கக்கூடிய ஒரு சாதாரணமான இடம் அன்று. ஒரு வீடு என்றால் அந்த வீட்டில் மன அமைதியும், தெய்வீக அம்சமும் இருக்க வேண்டும். ஒரு சில வீடுகள் மிகவும் பிரமாண்டமாக இருக்கும் ஆனால் அந்த வீட்டிற்குள் நுழையும் பொழுது மன திருப்தி என்பது இருக்காது.

அதேபோன்று ஒரு சில வீடுகள் மிகவும் சிறிய குடிசை வீடாக இருந்தாலும் கூட, அந்த வீட்டில் நுழையும் பொழுது மன அமைதியும், தெய்வ கடாட்சம் நிறைந்த வீடாகவும் தோன்றும்.

ஒரு வீடு என்றால் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கும் அந்த வீட்டிற்கு வந்து செல்பவர்களுக்கும் மன நிம்மதி, சந்தோஷம் போன்றவற்றை கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் நிலைவாசல் வைக்கும் பொழுது ஆகர்ஷண சக்தி உடைய நவதானியங்கள், நவரத்தின கற்கள், நாணயங்கள், சங்கு இதுபோன்ற பொருட்களை பதித்து வைப்பார்கள்.

ஒவ்வொரு வீட்டின் நிலை வாசலிலும் அந்த வீட்டின் குலதெய்வம் வாசம் செய்வதாக கூறப்படுகிறது. இதனால்தான் நிலைவாசலின் மீது அமரக்கூடாது, நிலை வாசலுக்கு உள்ளே நின்று எந்த பொருட்களையும் யாருக்கும் கொடுக்கக் கூடாது, வெளியே செல்லும் பொழுது நிலை வாசல் நமது காலை தடுத்தால் வெளியே செல்லக்கூடாது என்று நமது முன்னோர்கள் கூறுவார்கள்.

நமது குலதெய்வம் தான் நமக்கு காவல் தெய்வம். எனவே நமக்கு வருகின்ற ஆபத்தினை முன்னெச்சரிக்கையாக காட்டுவதற்கு தான் இந்த அறிகுறிகளை நமக்கு கொடுக்கின்றது. அதே போன்று எந்த ஒரு நல்லது, கெட்டது, நல்ல சக்தி, கெட்ட சக்தி இது போன்ற எதுவாக இருந்தாலும் நமது வீட்டின் நிலை வாசலை தாண்டி தான் வீட்டிற்கு உள்ளே வர முடியும்.

ஆனால் தீய சக்திகளை நிலை வாசலுக்கு வெளியே நிறுத்திவிட்டு, நல்ல சக்திகளை மட்டுமே வீட்டிற்கு உள்ளே கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான், இந்தந்த மரங்களால் மட்டுமே நிலை வாசலை வைக்க வேண்டும் என்றும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இப்படி பார்த்து பார்த்து வைக்கக்கூடிய நிலை வாசலை நாம் சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.

நமது வீட்டின் பூஜையறையில் இருக்கக்கூடிய தெய்வத்தை வழிபடும் அளவிற்கு, நிலை வாசலையும் வழிபட வேண்டும். ஏனென்றால் நமது குலதெய்வம் நமக்காக அந்த இடத்தில் இருந்து நமக்கு அருள்புரியக் கூடிய இடம். மற்ற தெய்வங்களின் அருளை பெறுவதை காட்டிலும், குலதெய்வத்தின் அருளை பெறுவது தான் மிகவும் அவசியம். ஏனென்றால் குலதெய்வத்தின் அருள் நமக்கு இருந்தால் மட்டுமே சகல சௌபாக்கியங்களும் நமக்கு கிடைக்கும்.

நிலை வாசலில் மஞ்சள் மற்றும் குங்குமத்தை கண்டிப்பாக வைக்க வேண்டும். கீழே தரையில் இருந்து ஒரு அடி வரையிலும் மஞ்சளை தடவி விட்டு, நிலை வாசலின் இருபுறமும் வைக்கக்கூடிய குங்குமத்தின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்குமாறு வைக்க வேண்டும். நிலை வாசலின் முன்புறம் மற்றும் பின்புறம் என இரண்டு பக்கங்களிலும் மஞ்சள், குங்குமத்தை வைக்க வேண்டும்.

இதேபோன்று நிலை வாசலின் மேல்புறமும் மஞ்சள், குங்குமத்தை வைத்து மாவிலை தோரணம் கட்ட வேண்டும். மா இலை கிடைத்தால் அடிக்கடி கட்டிக் கொள்ளலாம். மா இலை கிடைக்காதவர்கள் எவ்வளவு காய்ந்து இருந்தாலும் ஒருமுறை கட்டி விட்டு ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்கு கூட வைத்துக் கொள்ளலாம்.

நிலை வாசலுக்கு வைக்கக்கூடிய மஞ்சள், குங்குமத்தை வாரத்திற்கு ஒரு முறை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் வைத்துக் கொண்டால் போதும். ஆனால் ஊதுபத்தி மற்றும் கற்பூரத்தை தினமும் பூஜை அறைக்கும், நிலை வாசலுக்கும் காட்ட வேண்டும்.

நிலை வாசலுக்கு பூஜை செய்யும் பொழுது, தீபம் ஏற்றி வைத்து, ஊதுபத்தி அல்லது சாம்பிராணியை காண்பித்து நிலை வாசலுக்கு மேலேயும் கீழேயும் சிறிதளவு பூக்களை தூவி விட்டு, கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு தான் பூஜை அறை வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த நிலை வாசல் பூஜையை அன்றாடம் செய்து வரும் பொழுது, உங்கள் குடும்பத்தில் ஏற்படக்கூடிய மாற்றத்தை உங்களால் கண்கூடாக காண முடியும்.