எந்த ஒரு உயிரினத்திற்கும் நாம் உணவு வைத்தாலும், அந்த உயிரினம் நம்மை மனதார வாழ்த்துவதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக காகத்திற்கு நாம் உணவு வைக்கும் பொழுது நமது முன்னோர்களின் ஆசி, எமதர்மன் மற்றும் சனி பகவானின் ஆசியையும் பெற முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த உலக மக்கள் மற்ற உயிரினங்களுக்கு உணவு வைக்கிறார்களோ இல்லையோ, ஆனால் காகத்திற்கு கண்டிப்பாக உணவு வைத்து வருகின்றனர்.
ஆனால் காகம் என்பது நாம் உணவு வைக்கக்கூடிய நேரத்தில் நமது வீட்டிற்கு வரும் என்பதில் சந்தேகம் தான்.
எனவே காகத்திற்கு உணவு வைப்பது போலவே அருகில் உள்ள பசுமாடு, தெரு நாய்கள் போன்றவற்றிற்கும் உணவு வைக்க வேண்டும். வாயில்லா ஜீவன்களுக்கு உணவு வைக்க வேண்டும் என்பதை சாஸ்திரத்திலும் கூறப்பட்டுள்ளது.
காகம் ஆனது நமது வீட்டிற்கு அருகே வந்து கரைவது என்பது வழக்கம் தான். ஆனால் நாம் தூங்கி எழுவதற்கு முன்பாகவே நமது வீட்டிற்கு வந்து காகம் கரைகிறது என்றால், நம் மனதில் நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம், நிறைவேற போவதை அது உணர்த்துகிறது.
காகத்திற்கு உணவு வைக்கக்கூடிய பழக்கம் இல்லாதவர்களது வீட்டில் காகம் ஆனது கரைந்து கொண்டே இருந்தால், உணவு வைக்க வேண்டும் என்பதை அந்த காகம் உணர்த்துவதாக அர்த்தம். அதேபோன்று அமாவாசை நாட்களில் நமது முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் பழக்கம் என்பது உண்டு.
அந்த அமாவாசை திதியின் பொழுது படையல் வைத்து வழிபடுவோம். அந்த படையல்களில் உள்ள சாதத்தை காகத்திற்கும் படைப்போம். ஏனென்றால் நமது முன்னோர்கள் காகத்தின் வடிவில் தான் வந்து உணவு உண்பார்கள் என்பதற்காக காகத்திற்கு உணவு வைப்போம்.
இவ்வாறு அமாவாசை மற்றும் சனிக்கிழமை நாட்களில் காகத்திற்கு வைக்கக்கூடிய உணவில் ஒரு சில பொருட்களையும் சேர்த்து வைப்பதன் மூலம் நமது முன்னோர்கள், எமதர்மன் மற்றும் சனி பகவானின் அருளை பரிபூரணமாக பெற முடியும் எனவும், அதே சமயம் குடும்ப முன்னேற்றத்தில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கி செல்வ வளம் மற்றும் குடும்ப முன்னேற்றம் அடையும் எனவும் கூறப்படுகிறது.
காகத்திற்கு உணவு வைப்பதற்கு முன்பு அந்த இடத்தை நமது கைகளால் சுத்தம் செய்வது என்பதும் முக்கியம். காகத்திற்கு நாம் எப்பொழுதும் வைக்கக் கூடிய உணவுடன் சிறிதளவு எள், உலர் திராட்சை, நல்லெண்ணெய், தயிர் இவற்றுள் ஏதேனும் ஒரு பொருளையும் கண்டிப்பாக கலந்து வைக்க வேண்டும்.
இவ்வாறு காகத்திற்கு உணவு வைப்பதுடன் உணவிற்கு அருகிலேயே ஒரு டம்ளர் அல்லது தேங்காய் சிரட்டையில் தண்ணீர் ஊற்றி ஒரு துளசி இலையை போட்டு காகத்திற்கு வைக்க வேண்டும். இவ்வாறு உணவுடன் தண்ணீரையும் சேர்த்து வைப்பது பல கோடி நன்மைகளை நமக்குத் தேடித் தரும்.
குறிப்பாக அமாவாசை மற்றும் சனிக்கிழமை நாட்களில் காகத்திற்கு வைக்கக்கூடிய சாதத்தில் எள் மற்றும் உலர் திராட்சை என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நமது குடும்பத்தில் எந்த பிரச்சினையில் தடைகள் ஏற்பட்டாலும், அந்த தடைகள் நீங்கி குடும்பம் முன்னேற்றம் என்பது அடையும்.
அனைத்து நாட்களிலும் நமது வீட்டிற்கு வரக்கூடிய காகம் குறிப்பாக அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் வந்து உணவு உண்பதில்லை என்று கருதினால், அது ஏதேனும் நமது முன்னோர்களின் மன கஷ்டங்களாக கூட இருக்கலாம்.
இது போன்று காகம் உணவு உண்பதில்லை என்பதை உணர்ந்தால், அருகில் உள்ள பசு மாட்டிற்கு அகத்திக்கீரை, வாழைப்பழம், அரிசியுடன் சேர்த்த வெல்லம் இது போன்றவைகளை தானமாக கொடுப்பதன் மூலம், நமது முன்னோர்கள் அவர்களது மன கஷ்டங்களை நீக்கி நமக்கு அருள் புரிவார் என்றும் கூறப்படுகிறது.