நமது வீடுகளில் பலவிதமான மரம், செடி, கொடிகளை வைத்து வளர்த்து வருவோம். இருந்தாலும் ஒரு சில செடிகளை நமது வீட்டில் வளர்க்கலாமா? அல்லது கூடாதா? என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் இருக்கும். அந்த சந்தேகத்துடனே சில மரங்களை வளர்த்தும் வருவோம். அந்த வகையில் வில்வமரம் என்பதை நமது வீட்டில் வைத்து வளர்க்கலாமா அல்லது கூடாதா என்பதை குறித்து தற்போது காண்போம்.
இந்த வில்வ இலை என்பது சிவபெருமானுக்கு உகந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அனைத்து சிவன் கோவில்களிலும் இந்த வில்வ மரம் என்பது கண்டிப்பாக இருக்கும். சிவபெருமானை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வில்வ இலையை கொண்டு அபிஷேகம் செய்கிறார்கள்.
வில்வ மரத்திற்கு இயற்கையாகவே மிகவும் குளிர்ச்சியான தன்மை உண்டு. இந்த மரத்தில் உள்ள வேர், இலை, தண்டு ஆகிய அனைத்தும் குளிர்ச்சியை வெளிப்படுத்துவதால் இந்த செடியில் விஷத்தன்மை வாய்ந்த பூச்சிகள் தங்கிவிடும் என்ற நம்பிக்கையும் நமது முன்னோர்களிடம் இருந்தது.
இந்த ஒரு காரணத்தால் தான் வில்வ மரத்தை நமது வீட்டிற்கு அருகில் வைத்து வளர்க்கக்கூடாது என்று கூறி வந்தனர். இந்த ஒரு காரணம் மட்டுமல்லாமல் இந்த மரம் வைத்திருக்கக் கூடிய குடும்பத்தினரும், இந்த வீட்டிற்கு வரக்கூடிய மற்றவர்களும் சுத்த பத்தமாக இருக்க வேண்டும் என்பது அவசியம்.
ஏனென்றால் இதில் தீட்டுப் படக்கூடாது. அதாவது தீட்டுடன் எவரும் இந்த மரத்தை தொடக்கூடாது. இதனால்தான் சிலர் இந்த மரத்தை வீட்டில் வைத்து வளர்க்க மாட்டார்கள். ஆனால் எவர் ஒருவர் தனது உடலையும், மனதையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள முடியும் என நம்புகிறார்களோ, அவர்கள் இந்த மரத்தை வைத்து வளர்க்கலாம்.
வில்வ மரத்தில் இரண்டு வகைகள் உள்ளன. இதில் எந்த வகையை வேண்டுமானாலும் நமது வீட்டில் வைத்து வளர்க்கலாம். இந்த மரத்தை வீட்டில் வைத்து வளர்க்கக் கூடாது என்பதற்காக பல விதமான காரணங்களை கூறினாலும் கூட, இந்த மரத்தை வீட்டில் வைத்து வளர்க்கலாம் என்பதற்காகவும் ஆன்மீகம் ரீதியாக பல காரணங்கள் கூறப்படுகின்றன.
பொதுவாகவே இந்த வில்வ மரத்திற்கு மருத்துவ குணங்கள் என்பது ஏராளமாக உள்ளது. குழந்தைகளுக்கு வயிற்றில் இருக்கும் குடல்ப்புண், சைனஸ் பிரச்சனை போன்றவற்றை குணப்படுத்தக் கூடிய நல்ல மருந்தாகவும் இது விளங்குகிறது.
இது மட்டுமல்லாமல் காற்று மாசுபாட்டை தடுத்து, நாம் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக மாற்றி கொடுக்கும் பண்பும் இந்த மரத்திற்கு உண்டு. இந்த வில்வ இலையை சாப்பிட்டால் அதிகப்படியான சக்தியை பெற முடியும் எனவும் கூறப்படுகிறது. இந்த அளவிற்கு இந்த வில்வ மரமானது ஆன்மிகம் ரீதியாகவும், மருத்துவம் ரீதியாகவும் சிறப்பான தன்மையை கொண்டு திகழ்கிறது.
சிலருக்கு இந்த மரத்தை வீட்டிற்கு அருகில் வைத்து வளர்க்க மன கஷ்டமாக இருந்தால், சற்று தொலைவில் உள்ள தோட்டங்களில் வைத்து வளர்க்கலாம். இவ்வாறு சற்று தொலைவில் வைத்த வளர்ப்பதும் நல்லது. இல்லையென்றால் வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் இந்த மரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தால் பலவிதமான புண்ணியங்களை நமக்கு தேடித் தரும்.
இந்த புண்ணியமானது நமது அடுத்த தலைமுறைக்கும் சென்று சேரும் என்பது உறுதி. மேலும் ஆன்மீகம் ரீதியாகவும் இந்த வில்வ மரத்தை வைத்து வளர்த்து வந்தால் அந்த குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் உருவாகும் எனவும் கூறப்படுகிறது.