குடும்பத்தில் தீர்க்க முடியாத பிரச்சனைகள், கவலைகள் என இருக்கும் பொழுது குலதெய்வ கோவிலில் இருந்து மண்ணை எடுத்து வந்து, நமது வீட்டில் வைத்து வழிபட்டோம் என்றால் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என கூறுவர். ஆனால் குலதெய்வத்தின் மண்ணை வீட்டில் வைத்திருக்கக் கூடாது எனவும் ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
ஒரு குடும்பத்திற்கு குலதெய்வம் என்பதுதான் ஆணிவேராக திகழும். எனவே தான் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு, குலதெய்வத்தின் காலடியில் இருக்கக்கூடிய மண்ணை நமது வீட்டில் எடுத்து வந்து வைத்திருப்போம். அவ்வாறு குலதெய்வத்தின் மண்ணை நமது வீட்டிற்கு எடுத்து வரலாமா? நமது வீட்டில் வைத்து அதனை வழிபடலாமா? என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் இருக்கும். அதற்கான விளக்கத்தை தற்போது காண்போம்.
பொதுவாக குலதெய்வ கோவிலில் இருந்து மண்ணை எடுத்து வந்து நமது வீட்டில் வைத்திருக்கக் கூடாது. ஏனென்றால் குலதெய்வ கோவிலில் இருக்கக்கூடிய ஒரு சிறு துளி மண்ணிற்கும், அந்த தெய்வத்தினுடைய சக்தி நிறைந்து இருக்கும். அத்தகைய சக்தி நிறைந்த மண்ணை நமது வீட்டில் வைத்திருக்கும் பொழுது அதிகப்படியான சுத்தபத்தம் என்பதும் அவசியம்.
நமது குலதெய்வம் மண்ணிற்கு தேவையான சுத்தபத்தத்தை நம்மால் ஒருபோதும் கண்டிப்பாக கொடுக்க முடியாது. ஏதேனும் ஒரு வகையிலாவது ஏதேனும் ஒரு தீட்டை செய்து விடுவோம். அல்லது வீட்டினை சுத்தம் செய்யும் பொழுது ஏதேனும் ஒரு வகையிலாவது அந்த மண்ணிற்கு தீங்கு விளைத்து விடுவோம்.
வீட்டினை மற்ற ஆட்களை கொண்டு சுத்தம் செய்கிறோம் என்கின்ற பொழுது, அவர்கள் சுத்தபத்தமாக இருக்கிறார்களா அல்லது இல்லையா என்பது நமக்கு தெரியாது, அதனாலும் தீட்டு ஏற்படலாம். மேலும் நமது வீட்டில் வைத்திருக்கும் பொழுது, கண்டிப்பாக எந்த வித தீட்டும் ஏற்படாதவாறு அந்த மண்ணை வைத்திருக்க முடியாது.
இவ்வாறு ஏதேனும் ஒரு தீட்டை ஏற்படுத்தி விட்டாலோ அல்லது வீட்டினை சுத்தம் செய்யும் பொழுது நமக்குத் தெரியாமலே அந்த மண்ணை தூக்கி எறிந்து விட்டாலோ, அது மிகப் பெரிய பாவச் செயலாக மாறிவிடும். எந்த பிரச்சனை தீர வேண்டும் என்பதற்காக அந்த மண்ணை கொண்டு வந்து நமது வீட்டில் வைத்திருக்கிறோமோ அதைவிட பெரிய பிரச்சனைகள் ஏற்பட தொடங்கி விடும்.
ஏனென்றால் குலதெய்வம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தெய்வம். எனவே அந்த குலதெய்வ மண்ணிற்கு நாம் தீங்கு விளைவிக்கும் பொழுது, அதனால் மிகப்பெரிய ஆபத்துக்களை சந்திக்க நேரிடும்.
இவ்வாறு குலதெய்வ மண்ணை நமது வீட்டில் எடுத்து வைத்து இருப்பதற்கு பதிலாக, குலதெய்வ கோவிலில் கொடுக்கக்கூடிய விபூதியை ஒரு டப்பாவில் சேகரித்து வைத்து, உடல்நிலை சரியில்லாத பொழுதோ அல்லது கெட்ட கனவுகள் வரும்பொழுது அல்லது முக்கியமான விஷயங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது அந்த விபூதியை நாம் வைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்யும் பொழுது நமது குலதெய்வத்தின் அருளும், பாதுகாப்பும் நமக்கு கிடைக்கும். இதனால் குலதெய்வத்திற்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது, நமக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் குலதெய்வ மண்ணை நமது வீட்டில் வைத்திருக்கும் பொழுது அந்த குலதெய்வம் நமது வீடும் முழுவதும் நிறைந்து இருக்கும்.
அவ்வாறு இருக்கையில் நமது வீட்டில் ஏதேனும் தப்பு தவறுகள் செய்யும்பொழுது, ஒழுக்கம் இல்லாமல் நடக்கும் பொழுது கண்டிப்பாக அதனால் நமக்கு பாதிப்புகள் ஏற்படும். ஏனென்றால் ஒரு வீட்டை எப்பொழுதும் சுத்தபத்தமாகவும், எந்தவித தீட்டை ஏற்படுத்தாமலும் வைத்துக்கொள்ள முடியாது. எனவே குலதெய்வ கோவிலின் மண்ணை எடுத்து வருவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.