நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது நமது எதிரிகள் தான்.அதிலும் குறிப்பாக நமக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் பொறாமை குணங்கள் தான் நமது முன்னேற்றத்தை வெகு விரைவில் குறைத்து விடும். நாம் நமது வாழ்க்கையில் ஒரு படி மேலே ஏறுகிறோம் என்றாலோ அல்லது நமது உறவினர்களை விட சிறிதளவு உயர்ந்து விட்டாலோ அவர்கள் நமக்கு எதிரிகளாக மாறிவிடுகின்றனர். நாம் உயர்வதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தவர்களை காட்டிலும் பொறாமை கொண்டு எதிரிகளாக மாறுபவர்களே இந்த உலகில் அதிகமாக இருக்கின்றனர்.
இந்த பொறாமை மற்றும் கண் திருஷ்டியினால் நமது குடும்பங்களில் ஏராளமான பிரச்சனைகள் மற்றும் நோய்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். மேலும் நமது முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தும். ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமையாக இருந்தாலோ, ஏதேனும் ஒரு புதிய பொருளை வாங்கி விட்டாலோ, தொழிலில் முன்னேற்றத்தை கண்டு விட்டாலோ எதிரிகள் பொறாமை கொண்டு அந்த குடும்பத்திற்கு ஏதேனும் ஒரு செய்வினை, பில்லி, சூனியம் இது போன்ற தீய செயல்களை செய்து விடுகின்றனர்.
இவ்வாறு எதிரிகள் நமது குடும்பத்திற்கு ஏதேனும் ஒரு தீய செயல்களை செய்து இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் எருக்கன் இலையை வைத்து ஒரு வழிபாடு செய்வதன் மூலம் அனைத்து தீய சக்திகளும் பறந்து ஓடிவிடும். இந்த பரிகாரத்தினை செய்வதற்கு எருக்கன் இலை ஒன்றினை எடுத்துக் கொள்ள வேண்டும். அது வெள்ளை எருக்கன் செடி இலையாக இருந்தால் மிகவும் சிறப்பு. கிடைக்கவில்லை என்றால் ஏதேனும் ஒரு எருக்கன் செடி இலையை எடுத்துக் கொள்ளலாம்.
அந்த இலையில் உங்கள் எதிரிகளின் பெயர்களை வேப்ப எண்ணையை பயன்படுத்தி எழுதிக் கொள்ள வேண்டும். பின்பு அந்த இலையை உங்கள் வீட்டின் வெளியில் அல்லது வீட்டிற்கு பின்புறம் அல்லது மொட்டை மாடியில் வைத்து அந்த இலையின் மேல் பச்சை கற்பூரத்தை வைத்து எரித்து விட வேண்டும். அது எரியும் பொழுது அதற்கு முன்பாக நாம் அமர்ந்து இனிமேல் எதிரிகளின் தொல்லை இருக்கக் கூடாது, அவர்களின் சதி திட்டம் எதுவும் பலிக்க கூடாது என்று மனதில் நினைத்து கொள்ள வேண்டும்.
அந்த இலை எரிந்து முடிந்த பின் அதனை கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இந்த பரிகாரத்தினை ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் செய்து முடித்திட வேண்டும். இந்த பரிகாரத்தினை செய்து முடித்தவுடன் நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும்.