தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்? என்ற விடுகதையை நாம் கேள்விப் பட்டிருப்போம். இந்த விடுகதை வித்தியாசமாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் இதற்கு பின்னால் ஒரு பெரிய புராண கதையே இருக்கிறது. இந்த விடுகதையின் அர்த்தம் என்ன? இந்த விடுகதைக்கான பதில் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
ஆவணி மாதத்தில் வரக்கூடிய திருவோணம் நட்சத்திரம் தான் கேரள மக்களால் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இப்பொழுது கேரளா என்று அழைக்கக்கூடிய மலையாள தேசம் தான் மகாபலி சக்கரவர்த்தியின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. கேரள மக்கள் இன்றைய நாள் வரையிலும் மதித்து போற்றும் அளவிற்கு உன்னத அரசனாக இருந்தவர் தான் மகாபலி சக்கரவர்த்தி.
முப்பத்து முக்கோடி தேவர்களும் பொறாமை கொள்ளும் அளவிற்கு நல்லாட்சி செய்தவரும் இவர்தான். சரி இப்பொழுது இந்த விடுகதைக்கான அர்த்தம் குறித்து காணலாம்.
1.தட்டான்-தானம் கேட்கும் வரியவர்களுக்கு தட்டாமல் கொடுப்பவர் தான் தட்டான்.(இங்கு மகாபலி சக்கரவர்த்தி தான் தட்டான்)
2.தட்டானுக்கு சட்டை-தானம் கொடுக்க நினைப்பவர்களின் எண்ணத்தை மாற்றுவது தான் தட்டானுக்கு சட்டை போடுவது. அதாவது தானம் செய்யவிடாமல் தடுப்பது.
3. குட்டைப் பையன்-வாமண அவதாரத்தை குறிக்கிறது. (இங்கு மகாவிஷ்ணு தான் குட்டை பையன்)
மகாபலி சக்கரவர்த்தி 99 அசுவமேத யாகம் செய்துவிட்டு 100 வது யாகம் செய்யும் பொழுது அனைவருக்கும் தானம் வழங்க நினைத்திருந்தார். இதனை அறிந்த தேவர்களுக்கு பயமும், அதிர்ச்சியும் ஏற்பட்டு விட்டது. ஏனென்றால் இந்த யாகத்தை அவர் முடித்து விட்டால் அவருக்கு நிறைய சக்திகளும், பலமும், வரமும் கிடைக்கும்.
அப்படி மகாபலி சக்கரவர்த்திக்கு இந்த வரம் கிடைத்து விட்டால் நம்மை மதிக்க மாட்டார் என்றும், இந்த மூன்று லோகத்தை ஆட்சி செய்யும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துவிடும் என்றும் தேவர்கள் பயம் கொண்டிருந்தனர். எனவே அனைத்து தேவர்களும் மகாவிஷ்ணுவிடம் சென்று உதவி கேட்கின்றனர். இதனால் மகாவிஷ்ணு அவர்கள் வாமணர் அவதாரம் எடுத்து அங்கு வருகிறார்.
மூன்று அடியை மட்டுமே கொண்ட வாமணர்(மகாவிஷ்ணு) ஒரு கையில் தாழம்பூ கொடையையும், மறுக்கையில் கமண்டலத்துடனும் மகாபலி சக்கரவர்த்தி வேள்வி நடத்தக்கூடிய இடத்திற்கு வருகிறார். வாமணர் வருவதை கண்ட மகாபலி சக்கரவர்த்தி “வாமணரே தான தர்மங்கள் அனைத்தும் முடிந்து விட்டதே, நீங்கள் இப்பொழுது தான் வருகிறீர்கள்” என்று கூறினார்.
அதற்கு வாமணர் “நீங்கள் பெரிய தானத்தை எதுவும் செய்ய வேண்டாம், எனது உயரத்தைப் போலவே இந்த உலகத்தில் மூன்று அடி மண்ணை மட்டும் கொடுத்தால் போதும்” என்று கூறினார். இவர் கேட்டதை மறுக்காமல் தானம் கொடுக்க நினைத்துள்ளார் மகாபலி சக்கரவர்த்தி. அப்போது அங்கு இருந்த அசுர குரு சுக்ராச்சாரியாருக்கு தெரிந்து விட்டது வந்திருப்பது மகாவிஷ்ணு என்று.
உடனே சுக்ராச்சாரியார் மகாபலி சக்கரவர்த்தியிடம் வந்திருப்பது மகாவிஷ்ணு, எனவே தானம் கொடுப்பதில் சற்று யோசித்து செயல்படு என்று கூறியுள்ளார். ஆனால் மகாபலி சக்கரவர்த்தி “பெருமாளே என்னிடம் வந்து தானம் கேட்கின்ற புண்ணியம் எனக்கு கிடைத்ததே பெரும் பாக்கியம்” என்று கூறி கமண்டலத்தில் இருக்கும் நீரை தாரை வார்த்து கொடுக்க முயன்ற பொழுது, சுக்ராச்சாரியார் வண்டாக மாறி கமண்டலத்தின் வாயை நீர் வராதபடி அடைத்துவிட்டார்.
அப்பொழுது குட்டை பையன் (மகாவிஷ்ணு) கமண்டலத்தில் அடைத்திருக்கும் பகுதியை தர்ப்பை புல்லை கொண்டு குத்தி இருக்கிறார். இவ்வாறு குத்தும் பொழுது வண்டாக உள்ளே இருந்த சுக்ராச்சாரியாரின் ஒரு கண் பாதிக்கப்பட்டு விடுகிறது. உள்ளே இருந்த வண்டு வெளியே வந்ததும் மகாபலி சக்கரவர்த்தி நீரை வாமனருக்கு கொடுத்து விடுகிறார்.
அதன் பிறகு மகாபலி சக்கரவர்த்தி “வாமணரே உங்களுக்கு வேண்டிய நிலத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறுகிறார். அப்பொழுது அந்த குட்டை பையன் தனது உயரத்தை வானம் வரையிலும் அதிகரித்து தனது உண்மையான ரூபமான மகாவிஷ்ணுவின் ரூபத்திற்கு மாறுகிறார்.
அதன் பிறகு தனது முதல் அடியை மண்ணுலகிலும், இரண்டாவது அடியை விண்ணுலகிலும் வைத்து அளந்து விடுகிறார். “மூன்றாவது அடியை நான் எங்கே வைப்பது?” என்று மகாபலி சக்கரவர்த்தியிடம் மகாவிஷ்ணு கேட்கிறார். அதற்கு மகாபலி சக்கரவர்த்தி கீழே அமர்ந்து மண்டியிட்டு “இறைவா மூன்றாவது அடியை எனது தலையில் வையுங்கள்” என்று கூறியுள்ளார்.
மகாவிஷ்ணுவும் மூன்றாவது அடியை அவரது தலையில் வைத்து பாதாள உலகத்தில் தள்ளி விடுகிறார். அதன் பிறகு அங்கு இருந்த சுக்கிராச்சாரியார் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறார். இறுதியாக மகாவிஷ்ணு சுக்கிராச்சாரியாரை மன்னித்து, கொடுப்பதில் வல்லவரான மகாபலி சக்கரவர்த்தியின் பெருமையை இந்த உலகிற்கு அறிய வைத்தார்.
இப்பொழுது இந்த விடுகதைக்கான பதில் உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்பொழுது மகாபலி சக்கரவர்த்தி தானம் செய்வதை தடுக்க முயலும் சுக்கிரச்சாரியாரை மகாவிஷ்ணு தண்டிப்பார் என்பதே இந்த விடுகதைக்காண விளக்கம். கட்டையால் அடிக்கும் குட்டை பையன் யார் என்றால் ‘மகாவிஷ்ணு’. எனவே இதுதான் இந்த விடுகதைக்கான பதில்.