“வந்த வினையும் வருகின்ற வினையும் கந்தன் என்ற பெயர் சொன்னால் ஓடிவிடும்” எனக் கூறுவார்கள். எவ்வளவு மோசமான தலையெழுத்தாக இருந்தாலும் “முருகா”என மனதார உருகி சொல்லி நெற்றியில் திருநீறு வைப்பவர்களின் தலையெழுத்தை முருகன் மாற்றி விடுவார், என்பது பக்தர்கள் பலர் வாழ்க்கையில் உணர்ந்ததாகும். முருகா என்ற நாமத்தில் மும்மூர்த்திகளும் அடங்கி இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
விதியை மாற்றி எழுதும் சக்தியை பெற்றவர் முருகப்பெருமான். முருகனை தினமும் வழிபடுபவர்களிடம் பில்லி, சூனியம், ஏவல் போன்ற எந்த தீய சக்திகளும் அண்ட முடியாது. எதிரிகளின் தொல்லையையும் போக்க கூடியவர். கொடிய நோயிலிருந்தும் விடுவித்து, மரண பயத்தை போக்க கூடியவர்.
முருகனின் விசேஷ தினங்கள்:
1. பங்குனி உத்திரம்-முருகப் பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்ற புனித நாள்.
2. சூரசம்ஹாரம்-அசுரர்களின் தலைவரான சூரபத்மனை முருகன் அளிக்கும் நிகழ்வு.
3. தைப்பூசம்- முருகனுக்கு வேல் வழங்கப்பட்ட தினம்.
4. கந்த சஷ்டி-ஆறு நாட்கள் விரதம் இறுதியாக சூரபத்மனை சம்ஹாரம் செய்கின்ற நாள்.
5. வைகாசி விசாகம்- முருகப் பெருமான் அவதரித்த நாள்.
மேலும் செவ்வாய்க்கிழமை என்பது முருகனுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். நவகிரகத்தில் செவ்வாய் கிரகத்தோடு நேரடி தொடர்பு கொண்டவர் முருகப்பெருமான். எனவே செவ்வாய்க்கிழமையில் விரதம் இருப்பது முருகனுக்கு மிகவும் உகந்ததாகும். முருகன் ஆலயத்தில் செவ்வாய்க் கிழமைகளில் ஆறு அகல் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபட்டு வந்தால், வாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். முருகப்பெருமானின் அருளை பெற்று வளமுடன் வாழவும் முடியும். பங்குனிஉத்திர நாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
இது போன்ற முருகனுக்கு உகந்த நாட்களில் முருகனை வழிபட்டால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். வாரந்தோறும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க் கிழமை நாட்களில் வெற்றிலை தீபம் ஏற்றி வந்தாலும் குடும்பம் முன்னேற்றம், குடும்ப நிம்மதி ஆகிய அனைத்தும் கிடைக்கும்.
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நாட்களில் சாமி படங்கள் வைக்கக்கூடிய இடத்தினை பன்னீர் போட்டு துடைக்க வேண்டும். அப்பொழுதுதான் பூஜை அறை முழுவதும் மங்களகரமான வாசனை பரவும். அதன் பிறகு சாமி படங்களுக்கு பூக்களை போட்டு அலங்கரித்துவிட்டு, தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும்.
வாரந்தோறும் வெற்றிலை தீபம் ஏற்றி வரும் பொழுது நாம் நினைத்த காரியம் விரைவில் கைகூடும். எனவே செவ்வாய்க் கிழமை நாட்களில் வெற்றிலை தீபம் ஏற்றுவது அவ்வளவு சிறப்பானது. ஒரு தட்டின் நடுவில் ஒரு அகல் விளக்கினை ஏற்றி வைத்து, அதனை சுற்றி ஆறு வெற்றிலைகளை வைத்து அந்த வெற்றிலைக்கு மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும்.
இப்பொழுது அந்த ஆறு வெற்றிலையின் மேல் ஆறு அகல் விளக்கு தீபங்களை ஏற்ற வேண்டும். அதன் பிறகு உங்களால் முடிந்த நெய்வேத்தியம் ஏதேனும் ஒன்றை வைக்க வேண்டும். குறிப்பாக முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்தது தேனும் திணை மாவும் ஆகும். பெரிய அளவில் நெய்வேத்தியம் செய்ய இயலாதவர்கள் இந்த எளிதான தேனும் திணை மாவையும் வைத்தாலே போதும்.
இந்த தேனும் திணை மாவும் உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது. இதனை முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக படைத்து, வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம். அல்லது இதனை செய்து கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தானமாகவும் கொடுக்கலாம். இவ்வாறு செய்வது பல சிறப்புகளை உங்களுக்கு தேடித் தரும். மேலும் முருகப் பெருமானின் அருளையும் பெறலாம்.