சனிபகவானும் ஐயப்பனும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் என்னவென்று தெரியுமா..??

Photo of author

By Janani

சனிபகவானும் ஐயப்பனும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் என்னவென்று தெரியுமா..??

Janani

Updated on:

சனிபகவான் என்பவர் தனது கடமையில் இருந்து சிறிதும் தவறாத ஒரு நீதிமான் ஆவார். சனிபகவானின் தந்தையான சூரிய பகவானையும், பரம்பொருளான சிவபெருமானையும் கூட இவர் விட்டு வைக்கவில்லை. அவர்களை பிடிக்கும் காலம் வந்த பொழுது தனது கடமையிலிருந்து தவறாமல் அவர்களை ஏழரை ஆண்டுகள் தனது பிடியில் வைத்திருந்தார்.

இவ்வாறு சனிபகவான் தனது கடமையில் இருந்து தவறாமல் சிவனையே ஆட்டம் காண வைத்ததனால் தான் ‘ஈஸ்வரன்’ என்ற பட்டம் பெற்று “சனீஸ்வரர்” என்று அழைக்கப்படுகிறார்.

தெய்வங்களையே ஆட்டி படைத்த இவர் மனிதர்களாகிய நம்மை விட்டு வைப்பாரா? அவரவர் காலம் வரும் பொழுது சனிபகவான் கண்டிப்பாக மனிதர்களை பிடித்துக் கொள்வார்.

இதனைப் போன்று தான் ஐயப்பன் பக்தனாக இருந்த ஒருவரை பிடிக்கின்ற காலம் வந்த பொழுது, அந்த மனிதனை பிடிக்க சனி பகவான் சென்று கொண்டிருந்தார். அதனைக் கண்ட ஐயப்பன் “எனது பக்தனை ஏன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு சனிபகவான் “ஏழரை சனி வரும் காலத்தில் பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் பிடிப்பேன். அதுதான் எனது கடமையும் கூட” என்று கூறினார். மேலும் அவர்கள் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப அவர்களை தண்டிக்கவும் செய்வேன் என்றும் கூறினார்.

அதற்கு ஐயப்பன், எனது பக்தர்களாக இருக்கக்கூடிய காலத்தில் நீங்கள் அவர்களை தண்டிக்க வேண்டாம். என்ன தண்டனையை கொடுக்க வேண்டும் என்று என்னிடம் கூறுங்கள், ஒரு மண்டல (48 நாட்கள்) காலத்திற்குள் அவர்கள் அனைத்து தண்டனைகளையும் அனுபவிக்கும் படி, விரத முறைகளாக வகுத்து அவர்களிடம் கொடுத்து விடுகிறேன் என்று கூறினார்.

அப்பொழுது சனிபகவான் “நான் கொடுக்கும் தண்டனைகளை ஒரு மண்டல காலத்திற்குள் எப்படி அவர்களை அனுபவிக்க செய்ய முடியும்?” என்று கேட்டார். அதனைப் பற்றி நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை.

1.எனது பக்தர்கள் ஒரு நாளைக்கு ஒருவேளை உணவை மட்டுமே உண்டு திருப்தி கொள்வார்கள்.

2. கட்டில், மெத்தைகளை தவிர்த்து வெறும் தரையிலேயே படுத்து உறங்குவார்கள்.

3. எனது பக்தர்கள் அவர்களது மனைவியிடம் பேசாமல் பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடிப்பார்கள்.

4. வெறும் காலில் காடு, மலைகளைத் தாண்டி வந்து என்னை தரிசிக்கவும் செய்வேன். மேலும் ஒரு மண்டல காலம் முழுவதும் “சுவாமியே சரணம் ஐயப்பா” என்னும் எனது நாமத்தையே கூற வைப்பேன்.

5. உனக்கு பிடித்த கருப்பு நிற ஆடையையே எனது பக்தர்களை அணியச் செய்வேன்.

6. காலணியை அணிந்து கொள்ளாமலும், முடியை திருத்திக் கொள்ளாமலும், எந்தவித சுப துக்க செயல்களில் கலந்து கொள்ளாமலும் “சுவாமி” என்று அனைவராலும் அழைக்க செய்வேன்.

7. தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளையும் குளிர்ந்த நீரால் குளிர்விக்க செய்வேன்.

இதுபோன்று நீங்கள் கொடுக்கக் கூடிய தண்டனைகளை விரத முறைகளாக வகுத்து அவர்களிடம் கொடுத்து விடுகிறேன். எனவே நீங்கள் உங்களது கொடூர பார்வையில் இருந்து சற்று விலகி, மனம் மகிழ்ந்து, எனது பக்தர்களுக்கு அருளாசி வழங்க வேண்டும் என்று ஐயப்பன் கூறினார்.

இவ்வாறு சனி பகவானுக்கு ஐயப்பன் கொடுத்த வாக்கின் காரணமாகத்தான், ஐயப்ப பக்தர்கள் இதுபோன்ற கடுமையான விரத முறைகளையும், கருப்பு நிற ஆடையையும் அணிந்து கொள்கின்றனர். ஐயப்பன் பக்தனாக இருக்கின்ற சமயத்தில் சனி பகவான் ஒருபோதும் அவர்களை பிடிக்க மாட்டார். மேலும் ஐயப்பன் பக்தர்களுக்கு சனி பகவான் பரிபூரணமான அருளையும் வழங்குவார்.