பசு மாட்டிற்கு ஏன் அனைத்து வீடுகளிலும் மீந்துபோன உணவை கொடுக்கிறார்கள் என்று தெரியுமா..?? பசு மாட்டிற்கு எதனால் இந்த சாபம் கிடைத்தது..??

Photo of author

By Janani

பசு மாட்டிற்கு ஏன் அனைத்து வீடுகளிலும் மீந்துபோன உணவை கொடுக்கிறார்கள் என்று தெரியுமா..?? பசு மாட்டிற்கு எதனால் இந்த சாபம் கிடைத்தது..??

Janani

ராமன், சீதை மற்றும் லட்சுமணன் ஆகிய மூவரும் வனவாசம் சென்ற கதை நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வனவாசம் சென்றிருந்த பொழுது ராமனின் தந்தை தசரத சக்கரவர்த்திக்கு திதி கொடுக்கக் கூடிய நாளும் வந்தது. அப்பொழுது கயாவிற்குச் சென்று பிண்டம் கொடுத்தால் மூதாதையர்கள் மோட்சம் அடைவார்கள் என்ற ஐதீகம் இருந்தது. எனவே இவர்கள் மூவரும் கயாவிற்கு சென்றனர்.

ராமனும், லட்சுமணனும் திதி கொடுப்பதற்கு தேவையான பொருட்களைக் கொண்டு வர அருகில் இருக்கும் கிராமத்திற்கு சென்றனர். நேரமும் கடந்து கொண்டே இருந்தது. ராமனும் லட்சுமணனும் இன்னும் வரவில்லை. சூரியன் மறைந்த பிறகு திதி கொடுப்பதால் எந்த ஒரு பயனும் இல்லை என்பதை அனைவரும் அறிவோம்.

தசரத சக்கரவர்த்தியும், அவர்களது மூதாதையர்களும் பிண்டத்திற்காக காத்திருப்பது போன்ற காட்சி சீதாதேவிக்கு தோன்றியது. உடனே சீதாதேவி “எனது மாமனாருக்கு நான் ஏன் பிண்டம் கொடுக்க கூடாது?” என எண்ணி அருகிலிருந்த பல்குனி ஆற்றில் குளித்துவிட்டு, பிண்டம் கொடுப்பதற்கு எந்த ஒரு பொருளும் இல்லாததால் அந்த ஆற்றில் இருந்த மண்ணையே எடுத்து உருட்டி வைத்து திதியை கொடுத்தார்.

அந்த பிண்டத்தை தசரத சக்கரவர்த்தியும், அவரது மூதாதையர்களும் மனதார ஏற்றுக்கொண்டு சீதா தேவியை ஆசீர்வதித்தனர். அப்பொழுது அங்கு நடந்த அந்த காட்சிக்கு சாட்சியாக அங்கிருந்த பசுமாடு, துளசி,பிராமணர், பல்குனி ஆறு மற்றும் ஆலமரம் இருந்தன. சிறிது நேரத்தில் ராமனும், லட்சுமணனும் திதிக்கு தேவையான பொருட்களை கொண்டு வந்தனர்.

ராமன் சீதா தேவியை நோக்கி திதி கொடுக்க தொடங்கலாமா என்று கேட்ட பொழுது, எனது மாமனாருக்கு நான் திதி கொடுத்து விட்டேன் அதனை அவரும் மனதார ஏற்றுக் கொண்டார் என்று பதிலளித்தார் சீதாதேவி. ஆனால் ராமன் அதைக் கேட்டதும் மிகவும் கோபம் அடைந்தார்.

எனது தந்தைக்கு நீ பிண்டம் கொடுத்தாயா? பெண்கள் பிண்டம் கொடுக்கலாமா? சாஸ்திரத்தில் அதற்கு இடம் உண்டா? என்று பலவிதமான கேள்விகளை ராமன் சீதையிடம் கேட்டார். அது மட்டுமல்லாமல் நீ கொடுத்த பிண்டத்தை எனது தந்தை ஏற்றுக் கொண்டார் என்பதற்கு என்ன சாட்சி உள்ளது? என்றும் கேட்டார்.

அதற்கு சீதாதேவி சாட்சியாக 5 பேர் உள்ளனர் என்றார். அந்த ஐந்து பேரையும் எனது முன்பு வந்து உண்மையை கூற சொல் என்று ராமர் கேட்டார். சீதா தேவியும் பல்குனி ஆறு, பிராமணர், துளசி செடி மற்றும் பசு மாடு ஆகிய அனைவரிடமும் உண்மையை கூறுமாறு கேட்டார். ஆனால் இந்த நால்வரும் ராமரின் மேல் இருந்த பயத்தினால் உண்மையை கூற மறுத்துவிட்டு மௌனமாக இருந்து விட்டனர்.

இறுதியாக ஆலமரத்திடம் சீதாதேவி கேட்ட பொழுது, அந்த ஆலமரம் முதலில் ராமரை வணங்கி விட்டு “அன்னை சீதா அயோத்தி சக்கரவர்த்தி தசரதருக்கு பிண்டம் கொடுத்தது உண்மை. மன்னரும் மன நிறைவோடு சீதாதேவி கொடுத்த பிண்டத்தை ஏற்றுக் கொண்டு, சீதா தேவியை வாழ்த்திவிட்டு மோட்ச லோகத்திற்கு சென்றார்”.இதனை நான் பார்த்தேன் இதற்கு நானே சாட்சி என்று ஆலமரம் கூறியது.

எனினும் ராமர் ஆலமரம் கூறியதை நம்பவில்லை. எனவே அவர் திதி கொடுக்க ஆரம்பித்து தனது தந்தையை அழைத்தார், அப்பொழுது தசரத சக்கரவர்த்தி “எனது மருமகள் எனக்கு பிண்டம் கொடுத்து விட்டாள், நானும் அதனை மனதார ஏற்று கொண்டேன்” என்று கூறிய பிறகே ராமர் நம்பினார். பிறகு சீதையிடம் சென்று மன்னிப்பும் கேட்டார்.

அதன் பிறகு சீதாதேவி சாட்சி கூறாத நால்வரையும் சபித்தார். “பல்குனி ஆறே நீ இனிமேல் நீர் இன்றி வற்றிய நிலையில் காணப்படுவாய்”,”துளசி செடியே நீ இனிமேல் விஷ்ணு இருக்கும் இடத்தில் வளர மாட்டாய்”, “பிராமணரே இனிமேல் நீங்கள் உங்களது கையை நீட்டி வாசகம் வாங்கியே உணவு உண்ண வேண்டும்”,”பசுவே உனது முகத்தில் இருக்கும் லட்சுமி இனிமேல் உனக்கு பின்பாகத்தான் இருப்பாள். இதனால் உனக்கு பூஜையும் பின்புறம் தான் நடக்கும். மேலும் அனைத்து வீடுகளில் இருந்தும் கிடைக்கும் பழைய சாதம் தான் உனக்கு இனிமேல் உணவாக கிடைக்கும்” என்று அனைவருக்கும் சாபம் விட்டார்.

ஆலமரமே நீ உண்மையை கூறியதால், நீ என்றென்றைக்கும் நீதிக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வாய் என்று சீதாதேவி வாழ்த்தினார். இதனால்தான் இன்றைக்கும் ஆலமரத்தின் அடியில் தீர்ப்புகள் வழங்கப்படுகிறது.