வீட்டில் செல்வ வளத்துடன் மகிழ்ச்சி, நிம்மதி எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவியின் அருள் நிறைந்திருக்க வேணடும். இதற்கு நமது அன்றாட வாழ்க்கையில் சில எளிய விஷயங்களை செய்தாலோ போதும். வீட்டில் இருள் நிறைந்தோ, குப்பை நிறைந்து அசுத்தமாகவோ இருக்கக் கூடாது. அப்படி இருக்கும் வீட்டில் மகாலட்சுமி தங்க மாட்டாள்.
நமது வீட்டில் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகள், அதாவது லட்சுமி கடாட்சத்தை குறைக்க கூடிய சில தவறுகளை நாம் தெரிந்து கொண்டு செயல்பட்டோம் என்றாலே நமது வீட்டில் பாதி பிரச்சனைகள் குறைந்து விடும். நமது முன்னோர்கள் நமக்கு கூறி வந்த அனைத்து விஷயங்களுக்கும் ஒரு காரணம் இருக்கும்.
அதாவது வீட்டில் உள்ளவர்கள் கோபம்பட்டு, சண்டை போட்டுக் கொண்டே இருந்தாலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் கவலை, கண்ணீருடன் இருந்தால் அந்த வீட்டை மகாலட்சுமி திரும்பிக் கூட பார்க்க மாட்டாள் என்று நமது முன்னோர்கள் அந்த காலத்தில் இருந்தே நமக்கு சொல்லிச் சென்றுள்ளனர். இதனை நாம் பின்பற்றினாலே மகாலட்சுமியின் அருளை நாம் பெற முடியும்.
செல்வத்திற்கு அதிபதியானவள் மகாலட்சுமி. இவர் பணம், காசுக்கு மட்டுமல்ல தனம், தானியம், சந்தானம் என சொல்லப்படும் பதினாறு வகையான செல்வங்களுக்கும் அதிபதி மகாலட்சுமி தேவி தான். மகாலட்சுமி வீட்டில் குடியிருக்க வேண்டும். அதுவும் நிரந்தரமாக குடியிருக்க வேண்டும். குறைவில்லாத செல்வம் பெருக வேண்டும் என அனைவரும் விரும்புகிறோம்.
மகாலட்சுமிக்கு விருப்பமான விஷயங்களை தினமும் நாம் வீட்டில் மறக்காமல் செய்து வந்தாலே, குறிப்பாக பெண்கள் கடைபிடித்து வந்தாலே லட்சுமி கடாட்சம் வீட்டில் நிறைந்திருக்கும். அப்படி மகாலட்சுமிக்கு என்னவெல்லாம் விருப்பமானது, எவை எல்லாம் செய்யக் கூடாது, காலை முதல் இரவு தூங்க செல்வது வரை நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது காண்போம்.
காலையில் எழுந்ததும் முகத்தை கழுவி விட்டு முதலில் வீட்டின் பின்புற வாசலை திறந்த பிறகு தான் முன்புற வாசலை திறக்க வேண்டும். பின்புற வாசல் இல்லை. ஒரே வாசல் தான் உள்ளது என்கிறவர்கள் முதலில் ஜன்னலை திறந்து வைத்து விட்டு, பிறகு வாசல் கதவை திறக்க வேண்டும்.
வாசற் கதவை காலையில் திறக்கும் போது லட்சுமி தேவி நமது வீட்டிற்குள் வர வேண்டும் என வேண்டிக் கொண்டு, கிரக லட்சுமி…கிரக லட்சுமி என மூன்று முறை சொல்லி விட்டு கதவை திறக்க வேண்டும்.
வாசல் தெளித்து, மங்களகரமாக கோலம் போட வேண்டும். வீட்டில் நிலை வாசலில் இரண்டு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.
குளித்து விட்டு, வீட்டில் துளசி செடி இருந்தால் அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து, தண்ணீர் ஊற்றி வழிபட வேண்டும். துளசி மாடத்தில் விளக்கேற்ற வேண்டும்.
காலையில் தினமும் முதலில் பால் தான் காய்ச்ச வேண்டும். பாலை காய்ச்சி, சிறிது சர்க்கரை சேர்த்து, தெய்வத்திறகு படைத்த பிறகே வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட வேண்டும்.
தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைப்பது கிரக தோஷங்கள் ஏற்படாமல் இருக்கும்.
கை, கால்களை நன்கு சுத்தம் செய்த பிறகே வீட்டிற்குள் வர வேண்டும். சனி பகவான் பாத நுனியிலேயே பிடிப்பார் என்பதால் எப்போதும் கால்கறை குறை இல்லாமல் கழுவ வேண்டும்.
பெண்கள் வாசற் படியில் அமர்ந்து தலைவாரக் கூடாது.
மாலை நேரத்தில் கடன் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது.
ஊசி, இரும்பு பொருட்கள் கடன் கொடுக்கக் கூடாது.
வீட்டில் சமைக்கும் போது சாதமோ, பாலோ கருகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகள் இரவு தூங்க செல்வதற்கு முன் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து, நெற்றியில் திருநீறு அணிந்த பிறகே தூங்க செல்ல வேண்டும்.