முந்தைய காலங்களில் சமையல் அறை என்பது மிகவும் முக்கியமான ஒரு அறையாக திகழ்ந்து வந்தது. எனவே நமது முன்னோர்கள் குளித்துவிட்டு தான் சமையல் அறைக்கு செல்வார்கள். அந்த சமையலறையில் கோலம் போட்டு விளக்கேற்றி வைத்த பின்னரே சமையல் செய்ய தொடங்குவார்கள்.
இந்த சமையலறை என்பது தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் இருக்கலாம்.
இந்த சமையல் அறையில் அன்னபூரணியின் படத்தை சுற்றில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது மாட்டி வைத்துக் கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் சமையலறையில் முதலில் பாலை காய்ச்சி, சர்க்கரை சேர்த்து கடவுளுக்கு படைத்த பின்னரே உணவு செய்ய தொடங்குவார்கள்.
இவ்வாறு கடவுளுக்கு தினமும் படைத்துவிட்டு நமது சமையலை தொடங்குவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. அதேபோன்று சாதம் வடித்த பின்னர் இரண்டு சொட்டு நெய் விட்டு, துளசி வைத்து கடவுளுக்கு படைத்த பின்னர் நாம் உண்பதும் சிறப்பு.
சமையலறையில் கிழக்கு பார்த்தவாறு நின்று சமையலை செய்வதும், தெற்கு பார்த்தவாறு நின்று பாத்திரங்களை கழுவுவதும் நல்லது. சமையலறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் மகாலட்சுமியின் வரவு நமது வீட்டில் நிலைத்து இருக்கும்.
சமையலறையை அசுத்தமாக வைத்துக் கொள்வது உடல் ரீதியாகவும், ஆன்மீகம் ரீதியாகவும் சரியாக இருக்காது. சமையலறையில் நாம் செய்யக்கூடிய சமையல் என்பது நம் மனதுடன் இணைந்த ஒன்றாகும். நம் மனது நன்றாக இருந்தால் மட்டுமே நாம் செய்யக்கூடிய சமையலும் நன்றாக இருக்கும்.
சமையலறை என்பது புதன் மற்றும் சுக்கிரனின் மகிமை நிறைந்த ஒரு அறையாகும். எனவே சமையல் அறையை சுத்தமாக வைத்துக் கொண்டோம் என்றால் நமது வாழ்க்கை சிறப்பாக அமையும்.
அரிசியை அளக்கக்கூடிய படி என்பது சமையலறையில் கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்தப் படியை தப்பி தவறியும் கவிழ்த்து வைக்க கூடாது.
உப்பு என்பது நமது வீட்டில் எப்பொழுதும் நிறைவாக இருக்க வேண்டும்.
நமது முன்னோர்கள் வீட்டில் உள்ள உப்பு மற்றும் தானியங்களை குறையாமல் பார்த்துக் கொள்வார்கள். அவ்வாறு உப்பு மற்றும் தானியங்களை நமது வீட்டில் குறையாமல் பார்த்துக் கொண்டால் அன்னக் குறைவு என்பது ஏற்படாது.
அதே போன்று மஞ்சள் தூள் என்பதும் குறையாமல் இருக்க வேண்டும். மஞ்சள் தூள் என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் சிறந்தது. எனவே இந்த மூன்று பொருட்களும் நமது வீட்டின் சமையல் அறையில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.