சில பொருட்களில் இருந்து வெளிவரும் வாசனை எப்போதும் நேர்மறை ஆற்றலை நமது வீட்டில் கொடுத்துக் கொண்டே இருக்கும். இத்தகைய நேர்மறை ஆற்றல் தான் இறை சக்தி. நல்ல நறுமணம் நிறைந்த இடத்தில் இறை சக்தி குடியிருக்கும். நம்முடைய வீட்டில் இறை சக்தி நிரந்தரமாக குடியேற வேண்டும் என்றால், எந்த மாதிரியான பொருட்களை பூஜை அறையில் வைத்தால் நல்லது என்பது குறித்த ஆன்மீக தகவல்களை தற்போது காண்போம்.
இப்பொழுது சொல்லக்கூடிய பொருட்கள் அனைத்திலும் இறைசக்தி மற்றும் நேர்மறை ஆற்றல்கள் நிறைந்து இருக்கிறது. இந்த பொருட்களை ஒரே நாளில் வாங்கிக் கொண்டு வந்து பூஜை அறையில் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எந்தெந்த நாட்களில் எந்தெந்த பொருட்கள் கிடைக்கின்றதோ, அதைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்தாலே இறையருள் உங்களது வீட்டில் நிறைவாக இருக்கும்.
இறை சக்தி நிறைந்த பொருட்கள்:
1. அரகஜா:
புதியதாக சிலை வாங்கினாலும் சரி, கும்பாபிஷேகத்திற்கு பிறகு சிலைக்கு சக்தி ஊட்டுவதற்கும் சரி அந்த சிலையின் கண்களில் அரகஜா பூசப்படும். சுவாமிக்கு கண் திறக்கும் பொழுது, இந்த அரகஜாவை வைத்து தான் இறை சக்தியை அந்த சிலைக்கு கொடுப்பார்கள்.
இந்த அரகஜாவிற்கு அவ்வளவு சக்தி உண்டு. பூஜை அறையில் ஒரு சிறிய கிண்ணத்தில் திறந்த நிலையில் அரகஜா வைப்பது ரொம்ப ரொம்ப நல்லது. இதனுடைய வாசம் உங்களது வீடு முழுவதும் நிரம்பி ஒரு பாசிடிவ் எனர்ஜியை கொடுத்துக் கொண்டே இருக்கும்.
2. தாழம்பூ குங்குமம்:
இந்த வாசனைக்கு ஈடு இணை வேறு எதுவுமே கிடையாது. வெள்ளிக்கிழமை நாட்களில் மட்டுமாவது மகாலட்சுமி தாய்க்கு இந்த தாழம்பூ குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
பூஜை அறையில் இருக்கும் திருவுருவ படங்களுக்கு சந்தனம் வைத்து அதன் மேல் இந்த தாழம்பூ குங்குமத்தை வைத்து பாருங்கள், உங்கள் வீட்டில் தெய்வ கடாட்சம் நிறைந்து இருக்கும்.
3. மல்லிகை பூ, செண்பகப் பூ:
மல்லிகை பூவின் வாசம் கேட்கவே வேண்டாம், நாம் எல்லோருக்கும் தெரியும் அத்தனை மனம் கொண்டது இந்த பூ என்று. மேலும் எல்லா சுவாமிகளுக்கும் விருப்பமானது. செண்பகப்பூ இதனை தேவலோகப் பூ என்றும் கூறுவார்கள்.
பூ கடைகளில் சொல்லி வைத்து இரண்டு பூவோ அல்லது மூன்று பூவோ உங்களால் முடிந்த அளவிற்கு வாங்கி, சுவாமி திருவுருவப்படங்களுக்கு வைப்பது அவ்வளவு நல்லது.
4. மரிக்கொழுந்து:
இது பச்சை நிறத்தில் இலை போலத்தான் இருக்கும். ஆனால் இதனுடைய வாசம் தெய்வங்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த வாசனை இருக்கக்கூடிய இடத்தில் தெய்வங்கள் நிச்சயம் தங்கும். இந்த மரிக்கொழுந்து கிடைத்தாலும் சுவாமி படங்களுக்கு வையுங்கள்.
உங்களது வீட்டிற்கு அருகில் உள்ள கோவில்களுக்கு இந்த மரிக்கொழுந்தை வாங்கி கொடுப்பது நல்ல பலனை கொடுக்கும்.
5. பச்சைக் கற்பூரம்:
பச்சைக் கற்பூரத்தை பற்றி அனைவருக்கும் தெரியும். பச்சைக் கற்பூரத்திற்கும் இறை சக்தியை ஈர்க்கக்கூடிய தன்மை உண்டு. ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சை கற்பூரத்தை திறந்த நிலையில் வைத்து, உங்கள் வீட்டில் வரவேற்பு அறை, சமையல் அறை, படுக்கை அறை, பூஜை அறை என அனைத்து அறையிலும் வைத்துக் கொண்டாலே போதும் வீடு முழுவதும் தெய்வீக மணமுடன் இருக்கும்.
மேலும் இதன் வாசனை பாசிட்டிவ் எனர்ஜியையும், இறை சக்தியையும் அதிகரிக்க செய்யும். குடும்பமும் சந்தோஷமாகவும், லட்சுமி கடாட்சத்துடனும் இருக்கும்.
பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு சூட்டக்கூடிய பூக்கள் வாடிவிட்டால் அதனுடைய வாசனை போய்விடும். காலை, மாலை என இரு வேளையும் புதியதாக பூக்களை போட்டு பூஜை செய்தாலும், அதனுடைய வாசனை சிறிது நேரம் மட்டுமே இருக்கும்.
24 மணி நேரமும் பூஜை அறை வாசனையாக இருக்க ஒரு சிறிய கிண்ணத்தில் சந்தன பொடி 2 ஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், ஜவ்வாது 1/4 ஸ்பூன் போட்டு இந்த மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
இதை தேவையான அளவு ஒரு கிண்ணத்தில் போட்டு பன்னீர் ஊற்றி கலந்து பூஜை படங்களுக்கு பொட்டு வைத்தால், இந்த வாசனை அப்படியே நிறைவாக இருக்கும். இதில் இருக்கும் ஜவ்வாது மற்றும் பன்னீரின் வாசனை எப்பொழுதும் நிலைத்து இருக்கும்.
அதே போன்று சுவாமிக்கு வைக்கக்கூடிய சாமந்தி பூவானது வாசனை அற்று தான் இருக்கும். இந்த பூவினை சுவாமி படங்களுக்கு வைப்பதற்கு முன்பாக, பன்னீரில் நினைத்து வைப்பதன் மூலம் பன்னீரின் வாசனை நிறைந்து காணப்படும்.