தூங்கிய 2 வயது குழந்தையை கடித்த நாய்கள்! பதறிய பெற்றோர்!
தார்வார் அருகே நாவலூர் ரயில் நிலையம் அருகே நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலையில் அந்த விவசாய நிலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் அங்கேயே தங்கி இருந்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விவசாய கூலி வேலையில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் அந்த ரயில் நிலையம் அருகே குடிசை அமைத்து தங்கியுள்ளனர். அந்த விவசாய நிலத்தில் ராய்ச்சூர் மாவட்டம் லிங்சுகூர் பகுதியைச் சேர்ந்த கோபால்-சின்னம்மா அங்கேயே தங்கி இருந்து வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு இரண்டு வயதில் மகன் இருக்கிறான். அவர்கள் உட்பட அந்த குடிசையில் வசித்து வருபவர்கள் பலரும் வேலைக்கு செல்லும் சமயத்தில் குழந்தைகளை குடிசையில் விட்டுச் செல்வது வழக்கமான ஒன்றுதான்.
ஆனால் நேற்று முன்தினம் கோபால் சின்னம்மா தம்பதி தங்கள் இரண்டு வயது மகனை குடிசையில் படுக்க வைத்து விட்டு வேலைக்குச் சென்றுள்ளனர். அங்கு வசித்து வந்த மற்ற தொழிலாளர்களும் அதேபோல் குழந்தைகளை வீட்டிலேயே விட்டு சென்றனர். அந்தப் பகுதியில் தெரு நாய்கள் அட்டகாசம் அதிகமாக உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 8 தெருநாய்கள் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்ட குடிசை பகுதிகளில் சுற்றித் திரிந்து உள்ளன. அந்த சமயத்தில் அவர்களது குடிசை திறந்து கிடந்ததன் காரணமாக அந்த நாய்கள் அவர்களின் குடிசைக்குள் புகுந்து படுத்திருந்த குழந்தையை கடித்து குதறி உள்ளன. இதில் அந்த குழந்தை பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் குழந்தையின் பெற்றோருக்கு தகவல் தர, குழந்தையின் பெற்றோர் மற்றும் உடன் வேலை பார்த்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். அப்போது குழந்தையை நாய்கள் கடித்து குதறி கண்ணால் பார்த்த தாய் தந்தையும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து நாய்களை விரட்டி அடித்தனர். இருந்தபோதிலும் 2 வயது குழந்தை தானே, அதனால் உயிர் இழந்து விட்டது. குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது பார்ப்போரின் கல் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர் பின்னர் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தூங்கி இருந்த 2 வயது குழந்தையை தெரு நாய்கள் கடித்து குதறி கொன்ற சம்பவம், அந்தப் பகுதியில் பேரதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
நம் நாட்டில் பல இடங்களில் பார்க்கிறோம் ரோட்டோரங்களில் குடிசை போட்டு பலர் வாழ்கின்றனர். நாம் வளரும் நாடு என்றாலும் நாட்டு மக்கள் என்னவோ அதே ஏழ்மையிலேயே இருக்கின்றனர். அந்த நிலை எப்போது மாறும் என்று அரசாங்கம் தான் சொல்லவேண்டும். பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில் இதுபோன்ற துயரங்களையும் அவர்கள் சகித்துக் கொண்டு வாழ்கிறார்கள். இதனை போக்க அரசு விரைவாக திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.