நாம் ஒரு வீட்டினை கட்டும் பொழுது பல வாஸ்துகளை பார்த்து கட்டுவோம். ஆனால் செருப்பினை மட்டும் எங்கு வாஸ்து படி விட வேண்டும் என்பதை பலரும் அறியாமல் இருப்பர். செருப்பு தானே அதனை வீட்டிற்கு வெளியில் எங்கு வேணாலும் விடலாம் என்று கண்ட இடங்களில் விடுவது குடும்பத்தில் பல பிரச்சனைகளையும், நிதி பற்றாக்குறையையும் ஏற்படுத்தும். எனவே வாஸ்து படி செருப்பினை விடுவதற்கு ஏற்ற இடம் எது என்பதை தெரிந்து கொண்டு விட வேண்டும்.
நாம் செருப்பினை போட்டுக்கொண்டு பல இடங்களுக்கு செல்வோம் அது சேராக இருக்கலாம், சகதியாக இருக்கலாம் சில நேரங்களில் பொதுக் கழிவறைக்கு கூட சென்று வருவோம். இவ்வாறு பல இடங்களுக்கு சென்று வரக்கூடிய செருப்பினை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் விட வேண்டும். இல்லையென்றால் உடல் ரீதியாகவும் சரி, வாஸ்து ரீதியாகவும் சரி பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இவ்வாறு செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகள் தான் பெரிய பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.
என்ன காரணம் என்றே தெரியாமல் நாம் சம்பாதிக்கக்கூடிய அனைத்து பணமும் செலவாகி கொண்டே இருக்கும். தண்ணீரில் போட்ட உப்பினை போல செல்வமானது கரைந்து கொண்டே இருக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு கொண்டே இருக்கும். இதனால் நிம்மதி இல்லாத சூழல் நிலவிக் கொண்டே இருக்கும். இதற்கு காரணம் நம்மை அறியாமலேயே செய்யக்கூடிய சில வாஸ்து தவறுகள் தான். செருப்பை ஒரு சில இடங்களில் விடக்கூடாது என்ற சாஸ்திரங்கள் உள்ளது. அத்தகைய இடங்களில் விடும் பொழுது பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
செருப்பிற்கும் சனி பகவானுக்கும் தொடர்பு உள்ளதாக சாஸ்திரங்கள் கூறுகிறது எனவே செருப்பினை கண்ட இடங்களில் விட கூடாது. செருப்பை நேராக விட வேண்டும் கவிழ்த்து இருக்கக் கூடாது. பிஞ்ச செருப்பினை வீட்டில் வைத்திருக்காமல் அவ்வபோது அகற்றி விட வேண்டும். செருப்பானது அறுந்து போகாமல் இருந்தாலும் கூட இது என்னுடைய பழைய செருப்பு என்று சேர்த்து வைத்துக் கொண்டே வரக்கூடாது. இவ்வாறு செய்வது நிம்மதி இல்லாத சூழலை குடும்பத்தில் ஏற்படுத்தும்.
வடகிழக்கு மூலை என்று சொல்லக்கூடிய ஈசானி மூலையில் செருப்பினை வைக்க கூடாது. அவ்வாறு வைத்தால் நிதி சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். வீட்டின் நிலை வாசலுக்கு நேராக செருப்பினை விடக்கூடாது. அது பண வரவை தடுக்கும், வீட்டின் மகாலட்சுமி அம்சத்தை கெடுக்கும், குலதெய்வத்தின் வருகையையும் தடுக்கும். நமது வீட்டின் தலைவாசல் தான் தெய்வங்கள் வசிக்கக் கூடிய இடமாக கருதப்படுகிறது. எனவே தலைவாசலுக்கு நேராக செருப்பினை விடக்கூடாது.
ஒரு சிலருக்கு வீட்டிற்கு உள்ளேயும் செருப்பினை போடும் பழக்கம் உண்டு. அவர்கள் வெளியில் போடக்கூடிய செருப்பினை எத்தகைய காரணம் கொண்டும் வீட்டிற்கு உள்ளே போடக்கூடாது. அவ்வாறு வீட்டிற்குள் செருப்பினை போடுவதனால் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளால் வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும். வீட்டிற்கு உள்ளே செருப்பினை போட்டாலும் பூஜை அறைக்கு அருகில் போட்டு செல்லக்கூடாது.
கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு போன்ற திசைகளில் செருப்பினை விடவும் கூடாது. செருப்பு வைக்கக்கூடிய ரேக்கினையும் வைக்கக்கூடாது. வட மேற்கு மற்றும் தென்மேற்கு போன்ற திசைகளில் மட்டுமே செருப்பினை விட வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஏழை எளியவர்களுக்கு செருப்பினை தானமாக கொடுப்பதினால் சனி தோசத்திலிருந்து விலகலாம் எனவும் கூறப்படுகிறது.